மார்ச் 8… உலகமே கொண்டாடும் மகளிர் தினம். பொதுவாக, `கொண்டாடுவது’ என்றாலே அதன் பின்னணி வலிகள் பல நிறைந்ததாக இருக்கும். ஆண்டு முழுக்க உழைக்கும் உழைப்பாளர்களைக் கொண்டாடுவதற்கான ஒரு நாள், உழைப்பாளர் தினம். ஆனால், அன்றும் உழைத்து உழலும் கூட்டம்தானே அதிகம்?
அப்படித்தான், இங்கு பெரும்பான்மை பெண்களுக்கு மகளிர் தின கொண்டாட்டமும். ஆயுள் முழுக்க ஆதிக்கத்துக்கு உள்ளாக்கப்படும், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப் படும், பாலின பாகுபாடுகளுக்கு உள்ளாக்கப்படும் பெண் இனத்தை, மார்ச் 8-ல் மட்டும் கொண்டாடுவதாகச் சொல்வது… சம்பிரதாயமே. அதிலும், பரிசுகள் முதல் `சேல் டே’ வரை என இந்நாள் இன்று பெருவணிகத்துக்கானதாக, நுகர்வுக்கானதாக மாறிவருகிறது.
`வருடம் முழுக்க உழைத்துக் கொடுக்கும் மாடுகளுக்கு ‘மாட்டுப்பொங்கல்’ என ஒரு நாளை ஒதுக்கி, அதையும் மனிதர்களே கொண்டாடுவதுபோலத்தான் ஒரு வகையில் இந்த மகளிர் தினமும்’ என்ற தோழியின் வார்த்தைகளில், நிதர்சனத்தை உணர்ந்துகொண்ட தெளிவு.
உண்மையில், மகளிர் தினம் என்பது வாழ்த்து அட்டை, பரிசுப் பொருள்கள், சர்ப்ரைஸ்கள் போன்ற கொண்டாட்டங்களுக்கானது அல்ல. பெண்களின் பலதரப்பட்ட பிரச்னைகளும் உரக்கப் பேசப்பட வேண்டிய ஒரு கலக நாள். அது பிறந்த கதையும் அதுவே. தங்களுக்கான வாக்குரிமை, வேலை, சம்பளம் உள்ளிட்டவற்றுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், 1908-ம் ஆண்டு மார்ச் 8-ல் அமெரிக்க, நியூயார்க் நகரில் நடத்திய பேரணிதான் இவ்வுலகம் பார்த்த முதல் மகளிர் தினம். அந்த வகையில், அன்று ஆரம்பித்த போராட்டங்களுக்கான தீர்வுகள் இன்னும் முழுமையாகக் கிடைத்தபாடில்லை. சொல்லப்போனால் பாதி கிணறு கூட தாண்டவில்லை. அதேசமயம், புதுப்புது பூதங்களும் புறப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
இந்த ஆண்டு மகளிர் தினத்தில், பெண்கள் முன்னேற்றம் சார்ந்து நாம் கவனம் கொடுக்க வேண்டிய சமகாலப் பிரச்னைகளை பற்றி நம் வட்டத்தில் கலந்துரையாடலாம், கருத்துப் பரிமாற்றம் செய்யலாம், குரல் எழுப்பலாம். குறிப்பாக, குழந்தை வளர்ப்பு – அலுவல் பொறுப்பு என இவை இரண்டுக்கும் இடையில் அகப்பட்டு பெண்கள் படும் அல்லல்களை அரசிடம், சமூகத்திடம், குடும்பத்திடம் எடுத்துவைத்து நமக்கான தீர்வுகளைப் பெற வேண்டிய காலம் இது.
தாய்மைக்குத் தன்னை சரண் கொடுப்பவர்கள் பெண்கள். இன்றோ, பல நாடுகளிலும் பிறப்பு விகிதமே குறையும் அளவுக்கு, பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவிலிருந்து பின்வாங்கி வருகிறார்கள். பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் குழந்தை வளர்ப்புப் பொறுப்புகளை பெண்களுக்குக் கசப்பான அனுபவமாக மாற்றியது யார்? குழந்தையே வேண்டாம் என்று எண்ணுமளவுக்கான நெருக்கடிகளை அவர்களுக்கு உருவாக்கியது யார்? இப்பிரச்னைக்குத் தீர்வு என்ன?
இதை மிக விரிவாக அலசும் மகளிர் தின சிறப்புக் கட்டுரை, இந்த இதழில் இடம்பெற்றுள்ளது. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை, அனுபவங்களை, ஆலோசனைகளை அவள் விகடனுடன் பகிருங்கள் தோழிகளே. உரையாடல்களை முன்னெடுப்போம், தேவைகளை எடுத்துரைப்போம், உரிமைகளை உறுதிப்படுத்துவோம்!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்