Bihar: மக்கானா டு எதிர்க்கட்சிகள் அட்டாக் – 8 மாதங்களுக்கு முன்னே தேர்தல் வியூகத்தை தொடங்கிய மோடி

இந்த ஆண்டு இரண்டே மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் தான். அதில் ஒன்று டெல்லி சட்டப்பேரவை தேர்தல். அது நடந்து முடிந்து பாஜக 27 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி வாகை சூடி முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டு அந்த பரபரப்புகள் கூட அடங்கவில்லை, அதற்குள் இன்னொரு சட்டப்பேரவை தேர்தலான பீகார் மாநிலத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டது பாஜக.

தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய இடம் வைத்துள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிதிஷ்குமார் தலைமையில் பீகார் மாநில அரசு நடந்து வரும் நிலையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதுதான் இந்த ஆண்டில் நடைபெறும் இரண்டாவது மற்றும் கடைசி மாநில சட்டப்பேரவை தேர்தல்.

மோடி

தற்பொழுது மத்திய பாஜக அரசு ஆட்டம் காணாமல் தொடர்ந்து நடைபெறுவதற்கு நித்திஷ் குமார் மிக முக்கிய காரணி. அவர் ஏதேனும் முரண்டு பிடித்தால் பிரதமர் மோடியின் நாற்காலியே ஆட்டம் கண்டுவிடும். அதனால் பீகார் மாநிலத்தில் நித்திஷ் குமார் வெற்றி பெறுவது அவரை விடவும் பாஜக-விற்கு அதிக தேவை நிறைந்தது.

அதனால் தான் தற்போது பிரதமர் நரேந்திர மோடி தனது பிரச்சார வேலைகளை தொடங்கி விட்டிருக்கிறார். பிப்ரவரி 24ஆம் தேதி பீகார் மாநிலம் பகல்பூர் சென்ற அவர், தனது தேர்தல் பிரச்சாரத்தை கூட்டணி கட்சி தலைவர்களை மேடையில் வைத்துக் கொண்டு ஆரம்பித்திருக்கிறார்.

`மக்கானாவில் தொடக்கம்’

பகல்பூரில் விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட பொதுக்கூட்ட மேடைக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அங்கிருந்த மக்களை நோக்கி கையசைத்தபடியே வந்தார். அவருடன் வாகனத்தில் பீகார் முதல்வர் நித்திஷ் குமாரும் இருந்தார் .

மேடை ஏறிய பிரதமர் மோடிக்கு உணவு பொருளான மக்கானாவால் செய்யப்பட்ட ஆள் உயர மாலை அவருக்கு போடப்பட்டது. இந்த மக்கானா பீகார் மாநிலத்தில் விளையும் மிக முக்கிய விவசாய பொருளாகும் கடந்த பட்ஜெட்டில் கூட அதனால் தான் இந்த மக்கானவிற்கென்று தனி வாரியம் பீகாரில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மோடி

பி.எம் கிசான் சம்மன் நிதி என்ற விவசாயிகளுக்கான நேரடி நிதி வழங்கும் திட்டத்தின் 19 ஆவது தவணையை பிரதமர் மோடி விடுவித்து பொதுமக்களிடம் பேசினார். அப்போது, `தான் வருடத்தில் 300 நாட்கள் மக்கானாவை சாப்பிடுவதாகவும். அதை உலக அளவிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் பட்ஜெட்டில் இதற்கான சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது’ என பேசி கைத்தட்டல்களை வாங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவ்-வின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளை கடுமையாக சாடினார்.

`கும்பமேளாவை அசிங்கப்படுத்தி பேசுகிறார்கள்’

“புனித விலங்கான மாட்டிற்கு வழங்கப்படும் தீவனத்தில் கூட லாலு பிரசாத் யாதவ் ஊழல் செய்திருக்கிறார். அதனால் தான் அவர் தற்போது சிறையில் இருக்கிறார். ராஷ்டிரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த தலைவர்கள் தற்பொழுது உலகமே வியந்து பார்க்கும் கும்பமேளாவை அசிங்கப்படுத்தி பேசுகிறார்கள். காட்டு அரசியல் நடத்தும் அவர்களுக்கு நமது பல பெருமைகள் பற்றி எதுவும் தெரியாது. ராமர் கோவிலின் பெருமைகளை புறம் தள்ள பார்த்தவர்கள் தான், தற்போது மகா கும்பமேளாவையும் துச்சமாக நினைக்கிறார்கள். புனிதமான தருணங்கள் பற்றி அவதூறாக பேசும் இவர்களை பீகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது” எனவும் கோபம் கொப்பளிக்க பேசினார்.

மோடி

பீகார் மாநிலம் அதிக அளவில் விவசாயத்துறை சார்ந்த மாநிலம் என்பதால் விவசாயிகளை மையப்படுத்தியும் அவரது பேச்சு இருந்தது. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியிலும் மாநிலத்திலும் எப்போதும் விவசாயிகளின் நலனையே மனதில் கொண்டிருப்பதாகவும் தங்களது ஆட்சி தொடரவில்லை என்றால் நாடு முழுவதிலும் இருக்கக்கூடிய விவசாய சகோதர சகோதரிகளுக்கு எந்த சலுகைகளும் பலனும் கிடைக்காமல் போய்விடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார்.

நான் தற்போது பேசிக் கொண்டிருக்கும் பகல்பூரில் விக்ரம்சிலா பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்த பல்கலைக்கழகம் நாளந்தா பல்கலைக்கழகத்தை போல புகழ்பெற்று விளங்க போகிறது என அறிவித்த அவர், `வரக்கூடிய நாட்கள் பீகார் மாநிலத்திற்கு பல அரிய திட்டங்களை கொடுக்கப் போகும் நாட்கள், அதன் ஒரு பகுதியாகத் தான் இன்றைய தினம் சுமார் 1,100 கோடி ரூபாய்க்கு மதிப்பிலான நான்கு பாதங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டிருக்கின்றது. இது போன்ற ஏராளமான திட்டங்கள் வந்து கொண்டே இருக்க போகிறது. நீங்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டே இருக்க போகிறீர்கள்” என பிரதமர் பேச மேடையில் இருந்த நிதிஷ்குமார் அதைக் கைதட்டி ரசித்தார்.

வாக்குறுதிகள், எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதல் என வரப்போகும் நாட்கள் பீகார் மாநிலத்தைச் சுற்றி எப்படியெல்லாம் அமையப்போகிறது என்பதற்கான அடிப்படை கோட்டை பிரதமர் மோடி வரைந்திருக்கிறார். இதிலிருந்து பீகார் மாநிலத்திற்கான சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு 2,200 கோடி ரூபாய் நிதியை பிரதமர் இன்று விடுவித்த நிலையில் அதில் சுமார் 75 லட்சம் பேர் பீகார் மாநிலத்தை மட்டும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.