உத்தரபிரதேசம் மாநிலம், பிரக்யராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்ததால், எதிர்கட்சிகள் அரசு மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில் எதிர்கட்சிகளைத் தாக்கும் வகையில் ‘மக்கள் கும்பமேளாவில் எதைத் தேடினார்களோ, அது அவர்களுக்கு கிடைத்தது’ எனப் பேசியுள்ளார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.
அவரது சட்டமன்ற உரையில், “கழுகுகளுக்கு பிணங்கள் கிடைத்தன, பன்றிகளுக்கு அழுக்கு கிடைத்தது” எனப் பேசியது உ.பி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சமாஜ்வாடி கட்சியை குறிவைத்து தாக்கிய அவர், “உணர்ச்சிமிக்க மக்கள் அழகான உறவுகளைக் கண்டடைந்தனர். நம்பிக்கையுள்ளவர்கள் நிறைவடைந்தனர், நல்லவர்களுக்கு நற்பண்புகளும் ஏழைகளுக்கு வேலையும் கிடைத்தது, பணக்காரர்களுக்கு வணிகம் கைகூடியது. பக்தர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் கடவுளை அடைந்தனர். அதாவது ஒவ்வொருவரும் அவர்களது இயற்கையான தன்மைக்கு ஏற்ற பலன்களை அடைந்தனர்.” எனப் பேசினார்.
மேலும் கடந்த 2013ம் ஆண்டு சனாதனி அல்லாத நபருக்கு கும்பமேளாவை நடதத்தும் பொறுப்புகளை வழங்கியதாக அகிலேஷ் யாதவைக் குற்றம்சாட்டினார் யோகி ஆதித்யநாத். 2013ல் முகமது ஆசம் கான் மத கூடுதலுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

“உலகின் மிகப் பெரிய மத கூடுதலில் எல்லா மக்களும் ஒரே படித்துறையில் குளித்தனர். மக்களின் ஒற்றுமைக்கு இதைவிட மிகப் பெரிய ஒற்றுமை என்னவாக இருக்க முடியும்? உண்மையான சனாதனம் இதைத்தான் செய்கிறது” என்றும் கூறியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சி குறித்து, “நாங்கள் உங்களைப் போல நம்பிக்கையுடன் விளையாடவில்லை. உங்கள் ஆட்சியில், முதலமைச்சருக்கு விழாவை கவனித்துக்கொள்ள கூட நேரம் இல்லை. அவர் சனாதனி அல்லாத நபரை கும்பமேளா ஏற்பாட்டாளராக அமர்த்தினார்” எனப் பேசினார் யோகி.
மேலும் 2013ம் ஆண்டை ஊழல், குழப்பம் மற்றும் மாசு நிறைந்த ஆண்டாக கூறினார். “இங்கு நானே இறங்கி கும்பமேளா வேலைகளை கவனிக்கிறேன். இப்போதும் செய்கிறேன். 2013-ல் கும்பமேளா சென்ற அனைவரும் பெரும் குழப்பத்தையும், மாசுபாட்டையும், ஊழலையும் கண்டதற்கு காரணம் உள்ளது. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியின் திரிவேணியில் அப்போது குளிப்பதற்கு ஏற்ற தண்ணீர் கூட இல்லை. மொரீசியஸ் பிரதமர் குளிக்காமல் சென்றதே அதற்கு சாட்சி” என்றார் யோகி ஆதித்யநாத்.