அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு ‘தங்க அட்டை’; விலை $5 மில்லியன் – ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தார். அதன்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியா, மெக்சிகோ, கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பலகட்டங்களாக சட்டவிரோதமாக குடியேறியவர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், அமெரிக்காவில் குடியேறியவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டாலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: “நாங்கள் தங்க அட்டை ஒன்றை விற்பனை செய்ய இருக்கிறோம். க்ரீன் கார்டு போல இது கோல்டு கார்டு. இந்த அட்டைக்கு நாங்கள் 5 மில்லியன் டாலர்கள் என விலை நிர்ணயம் செய்துள்ளோம். இதில் க்ரீன் கார்டில் இருக்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.

இது குடியுரிமைக்கான ஒரு வழியாகும். பணக்காரர்கள் எங்கள் நாட்டுக்கு இந்த கார்டை பெற்று வரலாம். அவர்கள் இங்கே வசதியுடனும், வெற்றிகரமாகவும் இருப்பார்கள். அவர்கள் நிறைய பணம் செலவு செய்வார்கள், நிறைய வரி செலுத்துவார்கள். நிறைய பேரை வேலைக்கு அமர்த்துவார்கள்” இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.

மேலும் இந்த திட்டம் இரண்டு வாரங்களில் நடைமுறைக்கு வரும் என்றும், இதற்கு காங்கிரஸின் ஒப்புதலை பெறவேண்டிய அவசியம் தனது நிர்வாகத்துக்கு இல்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த தெளிவான தகவல்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.

அமெரிக்காவில் குடியேறும் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து கிரீன் கார்டுகளைப் பெற அனுமதிக்கும் தற்போதைய EB-5 என்ற திட்டத்துக்கு இது மாற்றாக இருக்கும் என்று அமெரிக்க வர்த்தகத் துறை செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.