எல்லா பக்கமும் வம்பு வளர்க்கும் சீமான்! – நாம் தமிழரின் இலக்குதான் என்ன?

பெரியார், விஜய், திமுக, காங்கிரஸ் என சீமான் எல்லா பக்கமும் வம்பு வளர்க்கிறார். இதனால் அவரது கட்சியிலிருந்து பலரும் விலகிக் கொண்டே இருக்கிறார்கள். இது அவரின் அரசியலுக்கு பின்னடைவாக முடியும் என ஒரு தரப்பு விமர்சிக்கிறது.

ஆனால், இதுதான் சரியான தமிழ்த் தேசிய பாதை, சரியாகவே சீமான் பயணிக்கிறார் என்கிறது நாம் தமிழர் தரப்பு. ​வாக்கு வங்கி அடிப்படையில் ஒவ்வொரு தேர்தலிலும் வளர்ந்​துவந்த சீமானுக்கு, நடிகர் விஜய் ‘திரா​விடம் – தமிழ்த் தேசியம்’ என கலந்துகட்டி கொள்கையை அறிவித்தது அதிர்ச்​சி​யளித்தது.

“விஜய்யின் அரசியல் சீமானை பாதிக்​கும். இளைஞர்கள் விஜய் பக்கமே செல்வார்கள்” என்று ஒரு தரப்பு ஆருடம் சொன்னது. அந்த நேரத்​தில்தான் பெரியார் பற்றி கடுமையான விமர்​சனத்தை முன்வைத்து மீண்டும் தலைப்பு செய்தி​களில் இடம்பிடித்தார் சீமான்.

பெரியார் பற்றிய சீமானின் விமர்சனம் திராவிட இயக்கங்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கின. சீமான் வீடு முற்றுகை, திக்கெட்டும் வழக்குகள், எல்லா பக்கமும் எதிர்ப்பு என பெரும் சலசலப்பை உருவாக்​கியது. ஆனாலும் அசராமல் மீண்டும் மீண்டும் பெரியாரை விமர்​சித்தார் சீமான். பெரியார் பிறந்த மண்ணான ஈரோடு கிழக்கு இடைத்​தேர்​தலில் போட்டி​யிட்ட நாதக, கட்டுத் தொகையை இழந்தது. இருந்​தாலும் கடந்த முறையை விட இருமடங்கு வாக்குகளை பெற்று​விட்டோம் என பெருமைப்​பட்டது நாதக.

அதன்பின்னர் விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுப்பதை ‘பணக்​கொழுப்பு’ என விமர்​சித்து, தவெக-வையும் கடும் டென்ஷ​னாக்​கி​னார் சீமான். பிறகு விஜயலட்​சுமி வழக்கு விவகார​மும், காளியம்​மாள், மகேந்​திரன் போன்றோரின் விலகலும் நாதக-வுக்கு பின்னடைவு எனச் சொல்லப்​பட்டது. அதையெல்லாம் வெளிக்​காட்டிக் கொள்ளாத சீமான், “இது களையுதிர் காலம்” எனச் சொல்லி சமாளித்​தார்.

இப்படி திராவிடக் கட்சிகள், தேசியக் கட்சிகள் தொடங்கி விஜய் கட்சி வரை வரிசை கட்டி சீமான் வம்பு வளர்ப்பது அரசியலில் என்ன மாதிரியான தாக்கத்தை உருவாக்கும் என்ற பேச்சு எழுந்​துள்ளது. ஒத்த கருத்​துடைய கட்சிகளுடன் நேசம் பாராட்​டாமல் சகட்டுமேனிக்கு அனைவரையும் விமர்​சித்தால் நாதக-வின் எதிர்​காலம் என்னாகும் என சீமானின் தம்பிகளே இப்போது கேள்வி எழுப்​பு​கிறார்கள்.

நாதக-வின் அரசியல் போக்கு குறித்து அக்கட்​சியின் கொள்கை பரப்புச் செயலாளர் புதுகை ஜெயசீலனிடம் பேசினோம். “நாங்கள் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து தமிழ்​நாட்டை தமிழரே ஆளவேண்டும் என்கிறோம். இந்தப் புள்ளியில் நாங்கள் திராவிடம், தேசிய சித்தாந்தம் இரண்டுடனும் அடிப்​படையில் வேறுபடு​கிறோம். விஜய்யும் திராவிட பிதாமகரான பெரியாரை ஏற்றுக்​கொண்​டுள்​ளார். அதனால்தான் நாங்கள் விஜய்யை எதிர்க்கிறோம்.

இப்படி ஒரே நேரத்தில் திராவிடத்​தையும் தேசியத்​தையும் எதிர்ப்​ப​தால், அனைவரையும் எதிர்ப்பது போன்ற தோற்றத்தை உருவாக்​கு​கிறார்கள். எங்கள் சித்தாந்​தத்தை ஏற்கும் கட்சிகளோடு நிச்சயம் இணைந்து செயல்​படு​வோம். உடனடியாக எங்கள் இலக்கை அடையமுடியா விட்டாலும், அடிப்படை கட்டமைப்பை வலுப்​படுத்தி தமிழ்த் தேசியத்தை வெல்ல​வைப்​போம்.

எல்லா கட்சிகளில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள் பிரிவது காலம் காலமாக நடப்பது​தான். அதுபோலவே நாதக-​விலும் நடக்கிறது. வளரும் அரசியல் அமைப்பில் புதிய செயல்​திட்​டங்களை அமல்படுத்​தும்போது சிலர் கருத்து முரண்​பாட்டால் விலகுவது தவிர்க்க முடியாதது. கட்சியை மறு சீரமைப்பு செய்யும்போது பலரிடம் பொறுப்பு பகிர்ந்​தளிக்​கப்படு​கிறது. அப்போது சிலரின் அதிகாரம் குறைவதாக எண்ணி வருத்​தமடைந்து விலகு​கிறார்கள். விலகுபவர்கள் மீண்டும் எங்களோடு இணைந்து செயல்​படு​வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார் அவர்.

2016 தொடங்கி இப்போது வரை நாதக ஒரு தொகுதியில் கூட வெற்றி​பெறா​விட்​டாலும், அதன் வாக்கு வங்கி​யானது தேர்தலுக்குத் தேர்தல் உயர்ந்து கொண்டே வருகிறது. ஆனால், அனைவரையும் போட்டுத் தாக்கும் சீமானின் தற்போதைய நடவடிக்​கைகள் நாதக வாக்கு வங்கியை இன்னும் உயர்த்துமா என்பது 2026 தேர்தலில் தெரியும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.