புரி: ஒடிசாவின் புரி அருகே வங்க கடலில் நேற்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் நேற்று காலை 6.10 மணிக்கு வங்க கடலில் 91 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. இது, 19.52 டிகிரி வடக்கு அட்சரேகையிலும் 88.55 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் பதிவானதாக நிலநடுக்க ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுகுறித்து ஒடிசா வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த நிலநடுக்கம் ஒடிசாவில் பாரதீப், புரி, பெர்ஹாம்பூர் மற்றும் சில பகுதிகளில் உணரப்பட்டது. இதன் மையப் பகுதி வங்காள விரிகுடாவில் காணப்பட்டதால் ஒடிசாவில் அதன் தாக்கம் குறைவாக இருந்தது. இதனால் உயிரிழப்போ அல்லது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல் இல்லை” என்றார்.