துபாய்,
8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆடவருக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி (743 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
இந்தப்பட்டியலில் இந்தியாவின் சுப்மன் கில் (817 புள்ளி) முதல் இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் (770 புள்ளி) 2வது இடத்திலும், இந்தியாவின் ரோகித் சர்மா (757 புள்ளி) 3வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஹென்றிச் கிளாசென் (749 புள்ளி) 4வது இடத்திலும் உள்ளனர். இந்தப்பட்டியலில் இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் (679 புள்ளி) 9வது இடத்தில் உள்ளார்.
அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டின் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இலங்கையின் மகேஷ் தீக்சனா (680 புள்ளி) முதல் இடத்திலும், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (658 புள்ளி) 2வது இடத்திலும், இந்தியாவின் குல்தீப் யாதவ் (656 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளனர்.
மேலும், ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி (296 புள்ளி), ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா (290 புள்ளி), ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துலா ஓமர்சாய் (263 புள்ளி) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.