கரூர்: குளித்தலை அருகே அரசுப் பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
கோவை சுகுணாபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ்(50). இவர், மனைவி கலையரசி(45), மகள் அகல்யா(25), மகன் அருண்(22) ஆகியோருடன் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். ஈரோடு மாவட்டம் வில்லரசன்பட்டியைச் சேர்ந்த விஷ்ணு(24) காரை ஓட்டியுள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை புறவழிச் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே நேற்று அதிகாலை வந்தபோது,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தும், காரும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரில் பயணித்த 2 பெண்கள் உட்பட 5 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 பேரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. விபத்து நேரிட்ட இடத்தில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். விபத்து குறித்து குளித்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.