ஜம்மு: ஜம்மு பிராந்தியத்தின் ரஜவுரி மாவட்டம், சுந்தர்பானி- மல்லா சாலையில் ராணுவ வீரர்கள் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மதியம் 1 மணியளவில் பால் என்ற கிராமத்தின் வனப் பகுதியில் இவர்களின் வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் 2 சுற்றுகள் வரை சுட்டு தாக்குதல் நடத்தினர். எனினும் இதில் ராணுவ வீரர்கள் காயமின்றி தப்பினர்.
இதையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெற்றது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள இப்பகுதி தீவிவாதிகள் ஊடுருவும் வழக்கமான இடங்களில் ஒன்றாகும்.
பஞ்சாபின் பதான்கோட் மாவட்டம் தாஷ்பதான் எல்லைச் சாவடிக்கு அருகில் நேற்று காலை இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தானியர் ஒருவரை பிஎஸ்எப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு விரட்ட முயன்றனர். எனினும் இந்திய எல்லைக்குள் தொடர்ந்து முன்னேறிய அவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் எல்லைக் காவல் படையிடம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என பிஎஸ்எப் செய்தித் தொடர்பாளர் கூறினார்.