வாணியம்பாடி: “தமிழகத்தின் புதிய நம்பிக்கை விஜய் என பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார். அதை பிஹார் மாநிலத்தவர் வந்துதான் செல்ல வேண்டுமா? அவர் வாங்கிய காசுக்கு கூவ வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் உள் கட்டமைப்பை மறுசீராய்வு செய்து திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று (பிப்.26) நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது, “தமிழக அரசியலில் ஊழல் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. பிரசாந்த் கிஷோர் பிஹாரில் இருந்து வந்து நம்முடைய மாநிலத்தில் ஊழல் இருப்பதை சொல்ல வேண்டிய தேவையில்லை. ஊழலில் இருப்பது தெரிந்தும் எதற்கு இங்கு வேலை செய்ய வேண்டும்.
எங்கள் ஊரில் ஊழல் இருக்கிறது என தெரிந்து அவர் ஏன் இங்கு வர வேண்டும். ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் வெல்வதற்கு எதற்காக வியூகம் வகுத்துக் கொடுக்க வேண்டும். கேடு கெட்ட ஊழல்வாதி, ஊழல் இருக்கிற மாநிலத்தில் ஏன் வேலை செய்ய வேண்டும்? உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு மாநிலத்துக்கு செல்லும்போது அவர் பேசுவது என்னவென்றால், இந்தியாவில் மத்திய அரசு ஆளுகிற மாநிலம் எப்படி இருக்கிறது என்பது குறித்துதான். மணிப்பூரில் எப்படி இருக்கிறது ஆட்சி? அதற்கு பொறுப்பு ஏற்று, வருந்தி இருக்கிறார்களா? பல மாதங்கள் தொடர்ச்சியாக கலவரம் நடக்கிறது.
அங்கு எத்தனை பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி, கொலை செய்யப்பாட்டார்கள். 8 வயது ஆசிஃபா குழந்தை கொலை செய்யப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார்களா? இப்போது தமிழகத்துக்கு வந்து நாங்கள், நேர்மையானவர்கள், புனிதமானவர்கள் என்று கூறுகின்றனர். இங்குள்ள ஊழலை நாங்கள் சரி செய்துக் கொள்கிறோம். நீங்கள் ஆளும் பகுதியில் அதை சரிசெய்யுங்கள்.
இங்கு வந்து எதையாவது பேசி விட்டு போகக்கூடாது. ஊழலை சரி செய்வதை நேர்மையானவர்கள் சொல்ல வேண்டும். மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது, அமித்ஷா உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது உங்களது மாநிலத்தில், நடந்த கலவரத்தை யோசிக்க வேண்டும். மேலும், அறியபெரும் பொருளாக இருக்கின்ற மணலை, அள்ளிக்கொண்டு செல்லும் கொடுமை உலகில் எங்கும் நடக்காது. ஆற்று மணல், மலையை கல்குவாரியாக மாற்றி, மரங்களை வெட்டுகின்றனர்.
லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர், நாளொன்றுக்கு 1 லட்சம் மணல் மற்றும் கல் ஏற்றுமதியாகிறது என்று. அப்படியென்றால், 10 ஆண்டில் ஒரு மலை இல்லாமல் போகும். மலை இல்லையென்றால் நிலம் பாலைவனமாகும். நமக்கு, பேராபத்தை ஏற்படுத்தும் என்பதை உணராமலேயே வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றோம். மணல் கொள்ளை நீண்டகாலாமக நடக்கிறது. அதை தடுக்கமாட்டார்கள். அதிகாரித்துக்கு தெரிந்துதான் இது நடக்கிறது. அதை தடுக்க மாட்டார்கள். அரசு நினைத்தால் அரைநொடியில் அதை தடுக்கலாம்.
போதைப்பொருட்கள் அரசுக்கு தெரியமலா விற்பனையாகிறது ? அதனை தடுக்க வேண்டும் என்றால் வேறொரு அதிகாரம் மக்களுக்கு தேவைப்படுகிறது. அதிகாரத்தை கட்டமைக்க வேண்டும். அதற்காக தான் நாங்கள் பாடுபடுகிறோம். நம்மொழியை படிக்கவே இங்கு முடியவில்லை, மும்மொழி படி என்பது வேறொரு பிரச்சினை. நிதி தரமால் இருப்பது மற்றொரு பிரச்சினை. முதல்வர் கூறுகிறார், 1 லட்சம் போராட்டத்துக்கு அனுமதி அளித்திருக்கிறோம் என்று, அப்படி என்றால் ஒரு லட்சம் பிரச்சினை இங்கு இருக்கிறது.
நாம் தமிழர் கட்சியை விட்டு சென்றவர்களை வாழ்த்துவோம். தோல் கழிவுகளை ஆற்றில் கலந்து ஆற்றை கழிவுநீர் கால்வாயாக மாற்றுவதால், வருங்காலத்தில், அதை சரி செய்ய முடியாது. இது பேராபத்தை ஏற்படுத்தும். தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக இயங்குகிறதா ? மதுகடைகளை திறந்து வைத்து விட்டு, தமிழக இளைஞர்களே போதையின் பாதையில் போகாதீர்கள் அப்பா சொல்கிறேன் என கேட்பது போல் இருக்கிறது. அனைத்து கட்சி கூட்டம் உங்களுக்கு தேவையென்றால் அழைப்பீர்கள். நாங்கள் வரவேண்டும்.
இத்தனை ஆண்டுகள், நடந்த கூட்டத்துக்கு ஏன் அழைக்கவில்லை.அதே கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் தனியாக போராடுவோம். இவர்களை நம்ப முடியாது. பருவகால வியாபாரம் போல தேர்தல் வியாபாரம் செய்வார்கள் இவர்கள். இப்போது தான் மும்மொழி கொள்கை வருகிறதா? இந்தி திணிப்புக்கும், திமுகவுக்கும் என்ன சம்பந்தம் ? இந்தியை எதிர்த்து மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடினார்கள். ஒரு திமுக மாணவர் தான் தீக்குளித்து இறந்தார். அண்ணா விலகுகிறார் என்பதற்காக தான் அவர் தீக்குளித்தார்.
தமிழர்கள் தாய் மொழி மீதுள்ள பற்றால், தன்னெழுச்சியாக போராடினார்கள். இவர்கள் இன்றைக்கு தேர்தல் வருவதால் பேசுகிறார்கள். புதிய கல்விக் கொள்கையையும், காங்கிரசின் கொள்கையும் அதுதான். தமிழகம் அதை முழுமையாக ஏற்கிறது. ஆனால், அதை எதிர்க்கிற மாதிரி நடிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இல்லம் தேடி கல்வி என்ற வெவ்வேறு பெயர்களில் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்திவிட்டார்கள்.
இந்தியை எதிர்ப்பார்கள், தாய்மொழியை காப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்திருந்தால், நாங்கள் ஏன் இந்த வேலை செய்கிறோம். இந்த நாடகத்தை ரொம்ப நாள் பார்த்துவிட்டு தான் நாங்கள் கிளம்பிவிட்டோம். தமிழகத்தின் புதிய நம்பிக்கை விஜய் என பிரசாந்த் கிஷோர் சொல்லி இருக்கலாம். அதை பிஹார் மாநிலத்தவர் வந்துதான் செல்ல வேண்டுமா? அவர் வாங்கிய காசுக்கு கூவ வேண்டும்.
பெரியாருக்கு என்ன கொள்கை இருக்கிறது? பெரியார் எங்களுக்கு நேரெதிரான கருத்தியல் கொண்டவர். அதனால் நாங்கள் எதிர்க்கிறோம். எனக்கு முன் நிறைய பேர் எதிர்த்து இருக்கிறார்கள். அண்ணா எதிர்த்ததால் தான் திமுக வந்தது. கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். ஆனால், பெரியாரை நாங்கள் இழிவாக பேசுவதாக இப்போது கூறுகிறார்கள். நாங்கள் பெரியார் பேசியதை தான் பேசுகிறோம். தொல்காப்பியரை ஆரிய கைக்கூலி என்பதை ஏற்பீர்களா?
திருவள்ளுவரை பார்ப்பன அடிமை என்பதை ஏற்பீர்களா? சிலப்பதிகாரத்தை விபச்சாரி கதை என்பதை ஏற்பீர்களா? நெஞ்சை அள்ளும், சிலப்பதிகாரம், பாரதி சொன்னதை ஏற்பீர்களா? தாசி கதை என்பதை ஏற்பீர்களா? திருக்குறள் ஒரு மலம் என்பதை ஏற்பீர்களா? எனக்கு விளக்கம் சொல்லி புரியவைக்க வேண்டும். எங்களுக்கு பல்லாயிரம் பெரியார் உள்ளார்கள். சொந்த பெரியார் ஆயிரம் இருக்கும்போது எங்கிருந்தோ வந்த பெரியார் எங்களுக்கு தேவையில்லை. அதை நீங்களே போற்றி துதிபாடி பூஜை செய்து கொண்டாடுங்கள்.
வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை விவகாரம் நீண்டு கொண்டே போகிறது. இந்த ஆட்சியை எந்த கொம்பனாலும், குறை சொல்ல முடியாத ஆட்சி என முதல்வர் கூறுகிறார். இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் என்று சொல்கிறார்கள். இது குறித்து அப்பாவிடம் தான் கேட்க வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டு காலமாக மலைாவாழ் மக்கள் நடந்தே போகும் அவலத்தை, இதுவரை ஏன் சாலை அமைக்க முன்வரவில்லை? என்பதை அப்பாவிடம் தான் கேட்க வேண்டும். இத்தகைய கொடுமைகள் செய்வதர்களுக்கு அதிகாரத்தை கொடுத்து, பிறகு, மனுக்களை கையில் ஏந்திக்கொண்டு அலைகிறீர்கள், எங்களை வேலை செய்ய விடுங்கள்” என்று அவர் கூறினார்.