மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் பிப். 26-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து வரும் 2,500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் செருப்பை தூக்கி வீசினார். நீண்ட நேரமாக விஜய்யின் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த அவர், கையில் வைத்திருந்த செருப்பை கேட்டின் உள்ளே தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து நடந்து சென்றார். உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலகர்கள் அவரை பிடித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்ததாக கூறப்படுகிறது. காலணியை வீசிய பிறகு விஜய் படங்களில் வரும் பன்ச் வசனங்களை அவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா இன்று நடக்க உள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் வீட்டில் செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.