தாய்லாந்து: பஸ் விபத்தில் சிக்கியதில் கல்வி சுற்றுலா சென்ற 18 பேர் பலி

பாங்காக்,

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் இருந்து கிழக்கே பிரச்சின்பரி மாகாணத்தில் இன்று அதிகாலை இரட்டை மாடி கொண்ட பஸ் ஒன்று சாலையில் பயணித்து கொண்டு இருந்தது. அந்த பஸ்சில் 49 பேர் கல்வி சுற்றுலாவுக்காக சென்றிருந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்தது. மலையில் இருந்து உருண்டது. இந்த விபத்தில், 18 பேர் பலியானார்கள். 31 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பிரேக் சரிவர பிடிக்காமல் பஸ் விபத்தில் சிக்கியிருக்க கூடும் என தகவல் தெரிவிக்கின்றது. உலகளவில் சாலை பாதுகாப்பில் மோசம் வாய்ந்த நாடுகளின் வரிசையில் தாய்லாந்தும் ஒன்றாக உள்ளது. இதனால், ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.

அதிக அளவிலான விபத்து ஏற்படுவதற்கு, பாதுகாப்பற்ற வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களின் அலட்சியம் ஆகியவை காரணிகளாக உள்ளன. கடந்த அக்டோபரில், பாங்காக் புறநகர் பகுதியில், பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றிச்சென்ற பஸ் தீப்பிடித்து எரிந்ததில், 23 பேர் உயிரிழந்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.