திருப்பூர்: திருப்பூரில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் சந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (25). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சந்திராபுரம் அம்மா உணவகம் அருகே நடந்து சென்றபோது, எதிர் திசையில் நடந்து வந்த 3 பேர், வெங்கடேசனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து அலைபேசி மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பினர்.
இது குறித்து வெங்கடேசன் நல்லூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், இது தொடர்பாக வழக்குப் பதிவு காவல் உதவி ஆணையர் விஜயலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீஸார், அய்யம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (28), கல்லூரி சாலையை சேர்ந்த பாலாஜி சரவணன் (28) மற்றும் திருமுருகன்பூண்டியை சேர்ந்த ராம்குமார் (28) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரித்த போது மூன்று பேரும் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் செல்போன் பறிப்பதை தொடர்கதையாக வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் திருப்பூர் சிறையில் அடைத்தனர். இதேபோல் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பயங்கர ஆயுதங்கள் நேற்று (பிப்.25) இரவு கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த 6 இளைஞர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.