பாட்னா: பிஹார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என கூறப்படும் நிலையில், பிஹார் வருவாய்த் துறை அமைச்சரும், பாஜகவின் மாநிலத் தலைவருமான திலீப் ஜெய்ஸ்வால், கட்சியின் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற கொள்கையை மேற்கோள் காட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, நிதிஷ் குமார் அமைச்சரவை இன்று அல்லது நாளை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால் பிஹார் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில், பிஹார் வருவாய்த் துறை அமைச்சரும், மாநிலத் தலைவருமான திலீப் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நான் வருவாய் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன். ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற கொள்கையை அடைப்படையாக கொண்டு பாஜக இயங்கி வருகிறது. மாநில தலைவர் பொறுப்பை எனக்கு வழங்கிய மத்தியத் தலைமைக்கு நான் நன்றி கூறிகொள்ள விரும்புகிறேன்” என்றார்.
ஜனவரி 18 அன்று திலீப் ஜெய்ஸ்வால் கட்சியின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிஹார் அமைச்சரவை விரிவாக்கத்துக்கு முன்னதாக பாஜக அமைச்சர் திலீப் ஜெய்ஸ்வால் ராஜினாமா செய்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளதோடு, அமைச்சரவையில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் கூறும்போது, “பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மாநிலத்தில் நிறைய வளர்ச்சிப் பணிகளைச் செய்திருப்பதால், பிஹார் மக்களை அவருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கடந்த முறை மக்கள் 43 இடங்களை வழங்கினீர்கள். இன்னும் மக்களுக்காக நிறைய பணிகளைத் செய்ய, தேர்தலில் அதிக இடங்களை வெல்வதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியும் (NDA) மற்றும் ஜனதா தளமும் தனது தந்தையை கூட்டணிக்கான முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.