புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, “அட்வான்டேஜ் அசாம் 2.0” உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு 2025- உச்சி மாநாட்டை கவுகாத்தியில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர், வடகிழக்கிற்கு இன்று முதல் புதிய எதிர்காலம் தொடங்குவதாக தெரிவித்தார்.
மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் முன்னிலையில் பிரதமர் மேலும் பேசியதாவது: கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கு நிலம் இன்று ஒரு புதிய எதிர்காலத்தை தொடங்குகிறது.
அட்வான்டேஜ் அசாம் என்பது முழு உலகையும் அசாம் மாநிலத்தின் சாத்தியமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துடன் இணைப்பதற்கான ஒரு மெகா பிரச்சாரமாகும். கிழக்கு இந்தியா நாட்டின் செழுமையில் பெரும் பங்கைக் கொண்டிருந்தது என்பதற்கு முந்தைய வரலாறு சாட்சியாக உள்ளது. அதேபோன்று இன்றைய இந்தியாவின் வல்லரசு வளர்ச்சியை அடையும் கனவுக்கு மீண்டும் நமது வடகிழக்கு மாநிலம் வலு சேர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்தியா தற்போது தனது உள்ளூர் வர்த்தக சங்கிலிகளை வலுப்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு பிராந்தியங்களுடன் சுதந்திரமாக வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளது. கிழக்கு ஆசியாவுடனான நமது தொடர்புகள் வலுப்பெற்று வருகின்றன. மேலும் இந்தியா-மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
கடந்த 2018-ம் ஆண்டில் அசாமின் பொருளாதாரம் ரூ.2.75 லட்சம் கோடியாக மட்டுமே இருந்த நிலையில் தற்போது அது ரூ.6 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதற்கான அர்த்தம் என்னவென்றால் பாஜக தலைமையிலான அரசில் அசாமின் பொருளாதாரம் கடந்த 6 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. இது இரட்டை என்ஜின் அரசினால் விளையும் இரட்டை பலன்களை எடுத்துக் காட்டுகிறது.
செமிகண்டெக்டர் தயாரிப்பில் உலகின் முக்கிய மையமாக அசாம் மாறி வருகிறது. அசாமின் ஜாகிர்ரோடு பகுதியில் டாடா அமைத்துள்ள செமிகண்டெக்டர் ஆலை வட கிழக்கு முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
இந்த மாநாட்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி பேசுகையில், ” அசாமில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ரூ.50,000 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்ய உள்ளோம்” என்றார். அதேபோன்று, அதானி குழுமமும் அசாமில் உள்ள பல்வேறு துறைகளில் ரூ.50,000 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக உறுதியளித்துள்ளது.
வரும் 2030-ம் ஆண்டுக்குள் அசாமின் பொருளாதாரம் 143 பில்லியன் டாலரை எட்டும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.