இதற்காகவா நாங்கள் போராடுகிறோம்..? ஏ.ஐ. வீடியோ வெளியிட்ட டிரம்புக்கு ஹமாஸ் கண்டனம்

காசா:

காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் சூழலில், காசாவை கைப்பற்றி மேம்படுத்துவதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை அமெரிக்காவில் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ‘காசாவை அமெரிக்கா வாங்கிக்கொள்ளும். அங்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி, ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்குவோம். வீடு கட்டித்தருவோம். காசா புனரமைக்கப்பட்ட பின் பாலஸ்தீனர்கள் உட்பட உலக மக்கள் பலரும் அங்கு வசிப்பார்கள்’ என்றார்.

காசாவிற்கான ஒரு மேம்பாட்டுத் திட்டத்தை டிரம்ப் முன்மொழிந்துள்ளார், அதில் 2.1 மில்லியன் பாலஸ்தீனியர்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்றி, அதை அமெரிக்காவிற்கு சொந்தமான “ரிவியரா”வாக (கடற்கரை சுற்றுலா தலம்) மாற்றுவது அடங்கும்.

இந்நிலையில், காசாவை நவீன நகரமாக மாற்றியதுபோல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் (ஏ.ஐ.) உருவாக்கப்பட்ட வீடியோவை டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ புது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

அந்த வீடியோவில் எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் இருவரும் காசாவை பணக்கார நகரமாக மாற்றியிருக்கிறார்கள். வீடியோவில் காசாவின் ஆடம்பர தோற்றங்கள் காட்டப்பட்டு உள்ளன. வானளாவ உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், பரபரப்பாக செயல்படும் சந்தைகள், கடற்கரைகள் என ஆடம்பர வாழ்க்கையை பிரதிபலிக்கும் அம்சங்கள் இடம் பெற்று உள்ளன. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, டிரம்ப்புடன் கடற்கரையில் அமர்ந்து ஓய்வெடுப்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை டிரம்ப் மற்றும் இஸ்ரேல் ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளனர். ஹமாஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி ஹமாஸ் அமைப்பின் அரசியல் குழு உறுப்பினர் பாசெம் நயீம் கூறியதாவது:-

துரதிர்ஷ்டவசமாக, மக்களின் கலாச்சாரங்கள் மற்றும் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் டிரம்ப் மீண்டும் தனது கருத்துக்களை முன்மொழிகிறார்.

காசாவை மறுகட்டமைப்பு செய்து, பொருளாதார மீட்பு, குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்கும் நாளை காசா மக்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறார்கள். ஆனால், பெரிய சிறைச்சாலைக்குள் இருந்துகொண்டு அத்தகைய வெற்றியை பெற முடியாது. இந்த சிறைச்சாலை சூழ்நிலைகளை மேம்படுத்தவேண்டும் என நாங்கள் போராடவில்லை, சிறைச்சாலையையும் சிறை அதிகாரியையும் அகற்றுவதற்காகவே போராடுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.