லக்னோ: உத்தரப் பிரதேச மாநில தூய்மைப் பணியாளர்களுக்கு மாத ஊதியத்தை ரூ.16,000 ஆக உயர்த்தப்படுவதாகவும், போனஸாக ரூ.10,000 வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகா கும்பமேளாவுக்குப் பிறகு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ல் துவங்கி 45 நாட்கள் மகா கும்பமேளா விழா நடைபெற்றது. இதில், இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமாக, சுமார் 65 கோடி பேர் கலந்துகொண்டு புனித நீராடியதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வருகையால் ஏற்படும் அசுத்தங்கள், குப்பைகளை அகற்ற ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டிருந்தனர்.
கடந்த 45 நாட்களுக்கும் அதிகமாக, இந்தத் தூய்மைப் பணியாளர்களின் கடுமையான உழைப்பால் மகா கும்பமேளா கின்னஸ் சாதனை படைத்துள்ளது. உ.பி. அரசுக்கு இன்று கின்னஸ் சான்றிதழ் அளிக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை பிரயாக்ராஜ் வந்திருந்தார். அவருடன் துணை முதல்வர்களான கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பாதக், மற்றும் டிஜிபி பிரஷாத் குமார் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “இதுவரை ரூ.8,000 முதல் 11,000 வரை பெற்றுவந்த தூய்மைப் பணியாளர்களுக்கு இனி, ரூ.16,000 ஊதியமாக வழங்கப்படும். ஏப்ரல் மாதம் முதல் இந்த உயர்த்தப்பட்ட ஊதியத்துடன் போனஸாக ரூ.10,000 அளிக்கப்படும்.உ.பி. அரசு ஓர் ஆணையம் அமைத்து இந்த ஊதிய உயர்வை தூய்மைப் பணியாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த உள்ளது. மேலும், ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் அனைவரையும் சேர்த்து மருத்துவ வசதியும் அளிக்கப்படவுள்ளது.
இதன் மதிப்பு ரூ.5 லட்சம் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீட்டை, மருத்துவ நலம் உள்ளிட்ட அனைத்து உ.பி தொழிலாளர்களுக்கும் வழங்கப்படுகிறது,” என்று அவர் பேசினார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் படகுகள் ஓட்டிய படகு ஓட்டுநர்களுடன் பேசி, அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்களும், ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படுவதாக அறிவித்தார்.