“என் வாழ்க்கையில் சிறந்த முடிவு'' – அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய தொழிலதிபர் சொல்வதென்ன?

இந்தியர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது வாடிக்கையாகி விட்டது. அப்படி சென்றவர்கள் சிலர் அங்கேயே குடியுரிமை பெற்று வாழ்கின்றனர். சிலர் சிறிது காலம் இந்தியா வந்து செல்கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் தற்போது வளமான நாடுகளாகவும் வெளிநாட்டவருக்கு தொழில் மையமாகவும் இருக்கின்றன. என்றாலும் அதிலும் பல அரசியல் மற்றும் கலாசார சவால்களை அவர்கள் எதிர்கொண்ட வண்ணம் தான் உள்ளனர்.

உதாரணமாக, சமீபத்தில் அமெரிக்கா உரிய ஆவணம் இல்லாமல் குடியேறிய அயல்நாட்டைச் சேர்ந்தவர்களை விமானத்தில் விலங்கு பூட்டி அனுப்பியது. கலாசார பிரச்னை என்றால், பல இந்தியர்கள் அவர்கள் செல்லும் நாட்டின் கலாசாரத்தோடு ஒன்றி வாழ சிரமப்படுகிறார்கள். இதற்கிடையில் இன்னொரு பெரிய பிரச்னை, தங்கள் குடும்பத்தினரை பிரிந்து வேதனையில் வாழ்வது தான்.

அனிருத்தா அஞ்சனா

இந்த நேரத்தில், 10 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய தொழிலதிபரும் ஆர்க் அலைண்டின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அனிருத்தா அஞ்சனா இந்தியா திரும்பினார். இது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. விசா அல்லது தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளாலேயே அவர் இந்தியா திரும்பினார் என்ற பேச்சு எழுந்தது இதற்கு பதில் அளிக்கும் விதமாக அனிருத்தா தான் இந்தியா திரும்புவதற்கான காரணத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தார்.

பணிநீக்கத்தாலோ, குடியுரிமை சிக்கலாலோ அமெரிக்க நாட்டை விட்டு வரவில்லை. என்னுடைய வயதான பெற்றோரைப் பார்த்துக்கொள்வதற்காக மட்டுமே நான் இந்தியா திரும்புவதாக கூறும் அனிருத்தா அஞ்சனா தன்னுடைய பதிவில்,

“நான் அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கிறேன். இப்போது எனது பெற்றோர்களுக்கு எனது உதவி தேவைப்படுவதால் இந்தியா திரும்பியதைப் பற்றி கடைசியாக பதிவிட்டபோது, நான் வேலை இழந்திருக்க வேண்டும் அல்லது விசா பிரச்னைகளை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் உண்மையான காரணம், எனக்காக நிறைய தியாகம் செய்த எனது பெற்றோர்களுடன் நான் நேரம் செலவிட விரும்பினேன். ஆனால் அவர்கள் என்னை திரும்பி வரும்படி கேட்க மாட்டார்கள் என்பதை அறிந்தேன்.

அனிருத்தா அஞ்சனா

இதுவே நான் திரும்பி வந்ததற்கான ஒரே காரணம், இது என் வாழ்க்கையின் சிறந்த முடிவாக இருக்கும் என்று நான் உறுதியாக கூறலாம். இதன்வழி நான் நிச்சயமாக அவர்களின் வாழ்க்கையில் பல ஆண்டுகளை கூட்டியுள்ளேன். எனது வாழ்க்கையிலும் தான்.” என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

ஒரு ஏகபோகமான கார்ப்பரேட் வாழ்க்கை முறையில் தான் சிக்கிக்கொண்டதாகவும், அங்கு தனது அடையாளத்தை அவர் இழந்து கொண்டிருந்தார் என்றும் மேலும் படிப்படியாக ரோபோ போல மாறிக்கொண்டிருப்பதாகவும் முந்தைய ஒரு பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் அமெரிக்காவை விட்டு வெளியேற இது தான் காரணமாக இருந்தது என்றார் அவர்.

அனிருத்தாவின் இந்த பதிவின் கீழ் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். “அமெரிக்காவில் இருந்தாலும் அல்லது வீட்டிற்கு திரும்புவதாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் அது உங்கள் ஆன்மாவை மகிழ்ச்சியாக்கும் என்று நம்புகிறேன். வாழ்க்கையின் ஒரு பக்கம் அழகாக இருக்கும் இன்னொரு பக்கம் சவாலனதாக இருக்கும்” என எழுதியிருந்தார் ஒருவர்.

அனிருத்தா அஞ்சனா

மற்றொரு பயனர், “தாய் நாட்டிற்கு திரும்புவது என்பது சிறந்த முடிவு. இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.” என்று கூறினார்.

“இது நீங்கள் எவ்வாறு நல்ல விதத்தில் வளர்க்கப்பட்டு இருக்கிறீர்கள் என காட்டுகிறது. இன்றைய காலகட்டத்தில், இந்தியர்களுக்கு அமெரிக்காவுக்குச் செல்வதும் அங்கு தங்குவதும் ஒரு கௌரவ சின்னம். 70 -களின் இறுதியில் உள்ள பெற்றோர்களை, மாடி வீட்டில் பணிப்பெண்களுடன் விட்டுவிட்டு அமெரிக்காவில் வாழ்வது மதிப்புக்குரியது அல்ல… உங்களைப் போன்றவர்கள் இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார் இன்னொருவர்‌.

அனிருத்தாவின் இந்த முடிவு பலருக்கு உணர்ச்சிபூர்வமாக உள்ளது என்பதை அறியமுடிகிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.