புதுடெல்லி,
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வான் டெர் லெயன் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவருடன் ஒன்றியத்தின் 26 ஆணையாளர்களும் ஒரு குழுவாக வருகை தந்துள்ளனர்.
இதன்பின்னர் அவர், டெல்லியில் உள்ள ராஜ்காட் பகுதியில் அமைந்த மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உலக அமைதிக்காக மகாத்மா கூறிய விசயங்களை அவர் அப்போது நினைவுகூர்ந்து பேசினார் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவு தெரிவிக்கின்றது.
உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவுடன் வர்த்தக மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அவருடைய இந்த பயணம் அமைந்துள்ளது.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் இடையே, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்படாமல் நீண்டகால தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனை விரைவுப்படுத்தும் நோக்கில் இரு தரப்பும் முனைப்பில் உள்ளன. இந்த சூழலில், அவருடைய இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை அவர் இன்று சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடியை நாளை சந்திக்க உள்ளார்.