கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள தர்காவுக்குள் சிவலிங்க பூஜை செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று இந்து அமைப்பினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவலிங்க பூஜை செய்து வழிபட்டனர்.
கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் ஆலந்து பகுதியில் லட்லே மஷாக் என்ற பழமையான தர்கா அமைந்துள்ளது. சூஃபி துறவி லட்லே மஷாக்கின் நினைவிடம் அமைந்துள்ள இந்த தர்காவில் இந்து துறவி ராகவ சைதன்யாவின் சமாதியும் அமைந்துள்ளது. இந்த சமாதியில் உள்ள சிவலிங்கத்துக்கு இந்துக்கள் சிவராத்திரி தினத்தன்று பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
கடந்த 2022ம் ஆண்டில் தர்காவில் சிவலிங்க பூஜை நடத்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு கடந்த ஆண்டு போலீஸ் பாதுகாப்புடன் சிவலிங்க பூஜை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஹனுமன் சேனா அமைப்பை சேர்ந்த சித்தராமையா ஹிரேமத், லட்லே மஷாக் தர்காவில் சிவலிங்க பூஜை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நடராஜன், ”சிவராத்திரி தினத்தன்று (26ம் தேதி) காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை முஸ்லீம்கள் வழிபாடு நடத்தலாம். பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணிவரை இந்துக்கள் 15 பேர் லட்லே மஷாக் தர்காவுக்குள் சிவராத்திரி பூஜை செய்யலாம்”என அனுமதி அளித்தார்.
இந்த தீர்ப்பை இந்து அமைப்பினர் வரவேற்ற நிலையில், மற்றொரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கல்புர்கியில் உள்ள ஆலந்தில் கடும் பதற்றம் ஏற்பட்டது. எனவே அங்கு புதன்கிழமை (நேற்று) காலை 6 மணி முதல் வியாழக்கிழமை (இன்று) மாலை 6 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் சிவராத்திரி தினமான நேற்று சித்தராமையா ஹிரேமத் உள்ளிட்ட 15 பேர் அந்தலோனா சித்தலிங்கையா சுவாமி தலைமையில் நேற்று சிவலிங்க பூஜை நடத்தினர். 4 மணி நேரம் நடந்த இந்த பூஜையின் போது பலத்த போலீஸ் போடப்பட்டிருந்தது.