கோவை: தொழில் நகரான கோவையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருகிவரும் நிலையில், இந்தியாவிலேயே 2-ம் நிலை நகரங்களில் உலகளாவிய திறன் மையங்கள் அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளது. இந்தியா உலகளாவிய திறன் மையமாக (குளோபல் கெபாசிட்டி சென்டர்ஸ்-ஜி.சி.சி.) மாறி வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 1,285 உலகளாவிய திறன் மையங்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது ஜி.சி.சி-க்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 19 லட்சம் பொறியாளர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் மெஷின் லேர்னிங் எனப்படும் எம்.எல்., டேட்டா சயின்ஸ், சைபர் பாதுகாப்பு, பிளாக்செயின் தொழில்நுட்பங்களில் திறன்மிக்க பொறியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்திய அளவில் 800-க்கும் மேற்பட்ட ஜி.சி.சி. மையங்களுடன் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரை சென்னையில் 305 ஜி.சி.சி. மையங்கள் உள்ளன.
சென்னைக்கு வெளியே கோவையில் 25 ஜி.சி.சி. மையங்கள் உள்ளன. இந்தியாவிலேயே 2-ம் நிலை நகரங்களில் ஜி.சி.சி. மையங்கள் அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் கோவை 3-ம் இடம் பிடித்து சிறப்பு சேர்த்துள்ளது. அதேபோல 100-க்கும் மேற்பட்ட ஐ.டி. நிறுவன ‘ஸ்டார்ட் அப்’-கள் கோவையில் செயல்பட்டு வருகின்றன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியாளர்களும் உள்ளனர்.
இதுகுறித்து, கிரடாய் அமைப்பின் கோவை பிரிவு துணைத்தலைவர் அபிஷேக் கூறும்போது, “தொழில் நகரான கோவையில் கல்வி, மருத்துவம், ஜவுளித்தொழில் முக்கியத்துவம் பெற்றுவந்த நிலையில், தற்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் சுமார் 30 லட்சம் சதுர அடியில் இயங்கி வருகின்றன. இதில் பல ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்தியா உலகளாவிய திறன் மையமாக விளங்கி வருகிறது.
அந்த வகையில் இந்தியாவிலேயே 2-ம் நிலை நகரங்களில் மிக வேகமாக வளர்ந்துவரும் நகரான கோவையில் ஜி.சி.சி-க்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே 2-வது பெரிய சாஃப்ட்வேர் உற்பத்தி மையமாக கோவை உள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பிபிஓ மையங்களும் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது” என்றார்.