சாம்பியன்ஸ் டிராபி: அனைத்தும் இந்தியாவுக்கு சாதகம் – இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்

துபாய்,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதில் குரூப் ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும் அரைஇறுதிக்கு முன்னேறி விட்டன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை. குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டது. அந்த பிரிவிலிருந்து அரைஇறுதிக்கு தகுதி பெறும் 2 அணிகளின் இடத்திற்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மற்ற அணிகளை காட்டிலும் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாகவும் இந்திய அணிக்கு சாதகமாகவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் உசேன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “இந்திய அணி வேறு எங்கும் பயணிக்காமல் துபாய் மைதானத்திலேயே ஆடுவதால் அவர்களுக்கு கூடுதல் சாதகம் இருக்கும். ஏனெனில் இந்திய அணியை தவிர்த்து மற்ற அணிகள் அனைத்தும் துபாய்க்கும் பாகிஸ்தானில் உள்ள மூன்று நகரங்களுக்கும் இடையே பயணம் செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால் இந்திய அணிக்கு ஒரே ஓட்டல், ஒரே ஓய்வறை, ஒரே மைதானம் என்பதனால் அவர்கள் எளிதாக மைதானத்தை புரிந்து கொள்ள முடியும்.

அதுமட்டும் இன்றி மற்ற அணிகள் மைதானங்களுக்கு ஏற்ப அணிகளை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள வேளையில் இந்திய அணி ஒரே மைதானத்திற்கு ஏற்றார் போல் தரமான வீரர்களை அணிக்குள் இணைத்துள்ளது. மற்ற அணிகளுக்கு இருக்கும் பாதகம் இந்திய அணிக்கு இல்லாததால் இம்முறை இந்திய அணியே சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றும் வகையில் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போன்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.