லாகூர்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இதில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மல்லுக்கட்டின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 325 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இப்ராகிம் ஜட்ரான் 177 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 326 ரன் இலக்கை நோக்கி பேட் செய்த இங்கிலாந்துக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தன. 49.5 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து அணி 317 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 8 ரன் வித்தியாசத்தில் முதலாவது வெற்றியை சுவைத்தது. ஒமர்ஜாய் 5 விக்கெட்டுகளை அள்ளினார். ஜட்ரன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த பிரிவில் தொடர்ந்து 2-வது தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் கூறுகையில், ” சாம்பியன்ஸ் தொடரின் முதல் சுற்றில் இருந்து வெளியேறி இருப்பது மிகவும் ஏமாற்றமாக இருக்கின்றது. இன்றைய ஆட்டத்தில் கூட நாங்கள் பல வெற்றி வாய்ப்புகளை பெற்றிருந்தோம். ஆனால் எங்களுக்கான வாய்ப்பை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ரூட் அபாரமான ஒரு இன்னிங்ஸ் விளையாடினார். ஆனால் அவருக்கு எங்கள் அணியின் டாப் 6 வீரர்களில் ஒருவர் கூட துணை நிற்கவில்லை.
நாங்கள் பந்து வீசும் போது கடைசி 10 ஓவர்களில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தோம். அதுதான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராகிமுக்கு என்னுடைய பாராட்டுகள். அவர் அற்புதமான இன்னிங்ஸை ஆடி எங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தார். கடைசி 10 ஓவரில் 113 ரன்கள் கொடுத்ததெல்லாம் மோசமான விஷயமாக நான் நினைக்கின்றேன். அதன் மூலம் இந்த ஆடுகளத்தில் ஆப்கானிஸ்தான் அணி நல்ல ஸ்கோரை எட்டியது.
இதேபோன்று மார்க் வுட்டுக்கு காயம் ஏற்பட்டது. எனினும் காயத்தையும் மீறி அவர் தொடர்ந்து பந்து வீசினார். மார்க் வுட் இல்லாத நிலையில் நாங்கள் சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து கடைசி கட்ட ஓவர்களை வீசினோம். லிவிங்ஸ்டோனும் காயம் காரணமாக முதலில் வெளியேறி பின் கடைசி கட்டத்தில் வந்தார். ரூட் இங்கிலாந்து அணிக்காக அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் பிரமாதமாக விளையாடி வருகிறார். நெருக்கடியான கட்டத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதை எங்களுக்கு ஜோரூட் காட்டி இருக்கிறார்.
நான் சரியாக விளையாடவில்லை என்று எனக்கு தெரியும். சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்துவிட்டு நான் நன்றாக விளையாடாமல் போனது ஏமாற்றமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நான் உணர்ச்சிவசத்தில் எந்த முடிவையும் எடுக்க கூடாது என நினைக்கின்றேன்” என்று கூறினார்.