நடிகை விஜயலட்சுமி, கடந்த 2011-ம் ஆண்டு ஜீன் மாதம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனால் ஏழு தடவை கர்ப்பம் அடைந்து அதை கலைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் சீமான் என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அதன்பேரில் வளசரவாக்கம் போலீஸார், சீமான் மீது மோசடி , கொலை மிரட்டல் , பாலியல் பலாத்காரம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட (417,420,354,376, 506(1)) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், சீமான் தரப்பு நடிகை விஜயலட்சுமியிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த வழக்கில் மனவருத்தமடைந்த நடிகை விஜயலட்சுமி, வழக்கை வாபஸ் பெறுவதாகக் கூறினார். அதனால் சீமான் தரப்பு, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி சீமான் தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.. அதுமட்டுமின்றி சீமான் மீது உள்ள வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மீண்டும் இந்த வழக்கு சூடுபிடித்திருக்கிறது.
நீதிமன்றத்தில் உத்தரவின்பேரில் நடிகை விஜயலட்சுமியிடம் போலீஸார் கடந்த சில தினங்களாக விசாரித்தனர். அப்போது விஜயலட்சுமி, சீமானுக்கு எதிரான சில முக்கிய ஆதாரங்களையும் தகவல்களையும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சீமானிடம் விசாரிக்க அவருக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்திலிருந்து கடந்த 24-ம் தேதி முதல் சம்மன் அனுப்பப்பட்டது. அதில் பிப்ரவரி 27-ம் தேதி காலை 11 மணிக்கு விசாரணக்கு ஆஜராகும்படி குறிப்பிட்டிருந்தது. ஆனால் சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதோடு, அவர் தரப்பில் வழக்கறிஞர்கள் டீம் காவல் நிலையத்தில் ஆஜராகி, ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக சீமான் ஆஜராகி எழுத்துபூர்வமாக விளக்கம் கொடுத்துவிட்டார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பதாக போலீஸாரிடம் கூறினர். ஆனால் சீமான் தரப்பு வழக்கறிஞர்களின் விளக்கத்தை வளசரவாக்கம் போலீஸார் ஏற்றுக் கொள்ளவில்லை.
அதனால் பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டில் இரண்டாவது சம்மனை வளசரவாக்கம் போலீஸார் ஒட்டினர். போலீஸார் அங்கிருந்து சென்றதும் சீமான் வீட்டிலிருந்து வந்தவர், அந்த சம்மனை கிழித்தெறிந்தார். அதனால் நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் தலைமையிலான போலீஸார், சம்மன் கிழிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த சீமான் வீட்டுக்குச் சென்றனர். அப்போது சீமான் வீட்டுக்குள் போலீஸார் நுழைய முற்பட்டனர். அவர்களை காவலாளி ராஜ் தடுத்தார். அப்போது போலீஸாருக்கும் சீமான் வீட்டு காவலாளி ராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அது கைகலப்பாக மாறியது. அதைத் தொடர்ந்து காவலாளி ராஜை போலீஸார் பிடித்து போலீஸ் வாகனத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது ராஜிடம் கைத்துப்பாக்கி இருப்பதைக் கவனித்த போலீஸார் அதை பறித்தனர். ஆனால் ராஜ், நான் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்னுடைய பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கி வைத்திருக்கிறேன் என்று கூறினார்.
அப்போது ராஜிக்கும் போலீஸாருக்கும் போலீஸ் வாகனத்துக்குள்ளேயே கடும் போராட்டம் நடந்தது. இறுதியில் ராஜிடமிருந்து போலீஸார் கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து சீமான் வீட்டிலிருந்த சுபாகர் என்பவரும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரையும் போலீஸார் பிடித்து நீலாங்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸார் கூறுகையில், “நாங்கள் சம்மனை ஒட்டிவிட்டு நாளை (28-ம்தேதி) ஆஜராகும்படி கூறிவிட்டு வந்துவிட்டோம். அதன்பிறகு சம்மனை சீமான் வீட்டிலிருந்தவர்கள் கிழித்திருக்கிறார்கள். இந்தத் தகவலைத் தெரிந்து விசாரிக்க நீலாங்கரை போலீஸார் சென்றபோதுதான் அவர்களை காவலாளி ராஜிடம், ஊழியர் சுபாகரும் மிரட்டியிருக்கிறார்கள். நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். சீமான் வீட்டில் நடந்த சம்பவத்தை நீலாங்கரை போலீஸார் விசாரிக்கிறார்கள்” என்றனர்.
இதுகுறித்து நீலாங்கரை போலீஸாரிடம் கேட்டதற்கு, “சம்மனை ஏன் கிழித்தீர்கள் என விசாரித்துக் கொண்டிருந்தபோது அவதூறாக எங்களை காவலாளியும் அங்கிருந்த ஊழியரும் பேசினர். அதனால் அவர்களைப் பிடித்து வழக்கு பதிவு செய்திருக்கிறோம். காவலாளி ராஜிடமிருந்து துப்பாக்கி ஒன்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். அதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
