பொதுமக்களுக்கும், சக வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் சாகசத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்படி, ஆபத்தான சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது திருச்சி முன்னாள் எஸ்.பி வருண்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்ததின் பேரில், சமீபகாலமாக பொது இடங்களில் இது போன்ற ஆபத்தான சாகசங்கள் செய்து ரீல்ஸ் வெளியிடுபவர்கள் பயந்து, பைக் சாகசத்தில் ஈடுபடுவதை நிறுத்தியிருந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், இளைஞர் ஒருவர் தனது யமஹா இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அதனை அவ்வழியாகச் சென்றவர்கள் செல்போனில் படம் பிடித்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையில், இந்த தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கைகளை விட்டுவிட்டு பைக்கின் பின் இருக்கை முனையில் அமர்ந்து, பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பயணம் செய்த அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இப்படி பைக் சாகசத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் யார் என்பது குறித்து திருச்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.