தேர்தல் ஆணையம் முன் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவேன் – மம்தா பானர்ஜி

கொல்கத்தா,

கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமுல் காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்- மந்திரியுமான மம்தா பானர்ஜி,

தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக மற்ற மாநிலங்களிலிருந்து போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த விஷயத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் தேர்தல் ஆணையத்தின் அலுவலகம் முன் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்.தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு செலுத்தவே தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை பாஜக நியமித்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலோடு பாஜக வாக்காளர் பட்டியலை எவ்வாறு கையாள்கிறது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

2006 -ல் நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்பு இயக்கத்தின் போது நான் 26 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னால், தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் ஒரு போராட்டத்தை தொடங்க முடியும். வாக்காளர் பட்டியலை சரிசெய்து போலி வாக்காளர்களை அகற்றக் கோருவதற்காக தேவைப்பட்டால் தேர்தல் ஆணையத்தின் அலுவலகம் முன் காலவரையற்ற போராட்டத்தில் நான் ஈடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி பாஜகவில் சேருவார் என்று சில செய்திகளில் வெளியாகின. பாஜகவின் முன் நான் ஒருபோதும் தலைவணங்க மாட்டேன். அபிஷேக் பானர்ஜி பாஜகவில் சேருவார் என்று சந்தையில் ஒரு புதிய மாயை பரப்பப்படுகிறது. நீங்கள் என் கழுத்தை அறுத்தாலும், ‘மம்தா பானர்ஜி ஜிந்தாபாத்’ என்ற முழக்கம் என் வாயிலிருந்து வரும் என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.