‘தேர்தல் ஆணைய அலுவலகம் முன் காலவரையற்ற போராட்டம் நடத்த தயங்க மாட்டேன்’ – மம்தா எச்சரிக்கை

கொல்கத்தா: “மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வெளிமாநில வாக்காளர்களை பாஜக சேர்க்கிறது. இவ்விஷயத்தில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தல் ஆணைய அலுவலகம் முன் காலவரையற்ற போராட்டம் நடத்த தயங்க மாட்டேன்” என மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக மற்ற மாநிலங்களிலிருந்து போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளது. இவ்விஷயத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் தேர்தல் ஆணையத்தின் அலுவலகம் முன் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்.

தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு செலுத்தவே தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை பாஜக நியமித்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது. தேர்தல் ஆணையத்தின் ஆசீர்வாதத்துடன் பாஜக வாக்காளர் பட்டியலை எவ்வாறு கையாள்கிறது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

2006 இல் நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்பு இயக்கத்தின் போது நான் 26 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னால், தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் ஒரு இயக்கத்தைத் தொடங்க முடியும். வாக்காளர் பட்டியலை சரிசெய்து போலி வாக்காளர்களை அகற்றக் கோருவதற்காக தேவைப்பட்டால் தேர்தல் ஆணையத்தின் அலுவலகம் முன் காலவரையற்ற போராட்டத்தில் நான் ஈடுபடுவேன்.

டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில், ஹரியானா மற்றும் குஜராத்தில் இருந்து போலி வாக்காளர்களைப் பதிவு செய்து பாஜக தேர்தல்களில் வெற்றி பெற்றது. தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்தப்பட்டால் மேற்கு வங்க தேர்தல்களில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்பதை பாஜக அறிந்திருப்பதால், அக்கட்சி ஹரியானா மற்றும் குஜராத்தில் இருந்து போலி வாக்காளர்களைக் கொண்டு வந்து மேற்கு வங்க தேர்தல்களில் வெற்றி பெற முயற்சிக்கும்.

மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பிற மாநிலங்களில் இருந்து போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவதை உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் உதவியுடன் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட போலி வாக்காளர்களை நாங்கள் அடையாளம் காண்போம். வெளியாட்கள் (பாஜக) மேற்கு வங்கத்தைக் கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம். பாஜக டெல்லி தேர்தலில் செய்ததை மேற்கு வங்கத்தில் செய்ய முடியாது.

அடுத்த ஆண்டு நடைபெற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 215 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவதே நமது இலக்கு. இதன்மூலம், பாஜகவின் வெற்றி வாய்ப்பை நாம் பெருமளவில் குறைக்க வேண்டும்” என்று தெரிவித்தார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 77 இடங்களைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.