லக்னோ,
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்றது. கடந்த மாதம் 13-ம் தேதி பவுர்ணமி தினத்தன்று தொடங்கிய பிரயாக்ராஜ் கும்பமேளா, சிவராத்திரியான நேற்று இரவுடன் முடிவடைந்தது. இந்த 45 நாட்களில் 66 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். இந்த 45 நாட்களும் பிரயாக்ராஜ் நகர் பக்தர்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. பக்தர்களின் அலைமோதிய கூட்டத்தால் பிரயாக்ராஜ் மக்கள் மிகவும் அவதிப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த நிலையில் மகா கும்பமேளா விழா முடிவடைந்ததையொட்டி உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மந்திரிகளுடன் சேர்ந்து பிரயாக்ராஜ் சென்றார். அங்கு கங்கை நிதிக்கரையில் ஆரத்தி எடுத்து வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுபற்றி பேசியதாவது;
எந்தவொரு தயக்கம், சிரமமின்றி கும்பமேளா விழாவை தங்கள் வீட்டின் விழாவாக கருதிய பிரயாக்ராஜ் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அவர்களுடைய உபசரிப்பு பாராட்டுக்குரியது. மகா கும்பமேளா விழா சுமூகமாக நடைபெற வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த கூட்டு முயற்சியால் சிறப்பான முறையில் மகா குமப்மேளா நிகழ்ச்சி நிறைவடைந்துள்ளது.
சாதுக்கள் உள்பட 66 கோடி பக்தர்கள் புனித சங்கமத்தில் நீராடினர். பிரயாக்ராஜ் மேளா ஆணையம், நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் சரியான ஆதரவும் இருந்தால், எந்த முடிவையும் அடைய முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.”
இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.