உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வந்த மகா கும்பமேளா ஆன்மிக நிகழ்வு பிரம்மாண்டமாக தொடங்கி, அது சற்றும் நீர்த்துப்போகாமல் நடந்து முடிந்துள்ளது.
2025 ஜனவரி 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 வரை நடைபெற்ற ‘மகா கும்பமேளா’ உலகின் பிரம்மாண்டமான, அமைதியான ஆன்மிக ஒன்று கூடல் என்று பெருமித அடையாளத்தைப் பெற்றுள்ளது. கங்கையும், யமுனையும், கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி நதியும் ஒன்று கூடும் இடமான திரிவேணி சங்கமத்தில் இந்தப் புனித நீராடல் நடைபெற்று முடிந்துள்ளது. 45 நாட்களில் எதிர்பார்த்ததைவிட அதிகமாக 66 கோடி பேர் கலந்து கொண்டனர் என்கிறது புள்ளிவிவரங்கள். இதன் பிரம்மாண்டத்தை ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்கா, ரஷ்ய நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கு நிகரான அளவில் பிரயாக்ராஜ் வந்து சென்றுள்ளனர் எனலாம்.
கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நதிகளில் நீராடி தங்களின் பாவங்களை நீக்கி, ஆன்மிக விடுதலைப் பெறுவதற்கு குவிந்து மேற்கொண்ட புனித நிகழ்வு முடிவுக்கு வந்தாலும், இந்த மகா கூடுகை பக்தி மற்றும் மகத்துவத்தின் எதிரொலிகள் வரலாற்றில் ஒரு நீங்காத முத்திரையை விட்டுச் சென்றிருந்தாலும், இத்தனை பெரிய கூடுகை எப்படி பெரிய நோய்த் தொற்று பரவல் இல்லாமல் முடிந்தது என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
66 கோடி பேர் நீராடிய மகா கும்பமேளாவில் நோய், தொற்று ஏதும் பரவாமல் தடுக்கப்பட்டது எப்படி என்பது வியப்பூட்டுவதாகவே இருக்கின்றது. ஆனால், அதன் பின்னணியில் அறிவியல் தொழில்நுட்பப் பயன்பாடு இருந்துள்ளது. இதனை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் ஜிதேந்திர சிங் விவரித்துள்ளார்.
66 கோடி பக்தர்கள் பிரயாக்ராஜ் வந்து புனித நீராடிச் சென்றுள்ள நிலையில், “அங்கு எவ்வித பெரும் நோய்த்தொற்றும் பரவவில்லை. இதன் பின்னணியில் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களின் தொழில்நுட்ப செயல்பாடு இருக்கின்றது” என்றார் ஜிதேந்திர சிங். அந்த தொழில்நுட்பம் பற்றிய விவரங்கள் தற்போது கவனம் பெற்றுள்ளது.
கும்பமேளாவில் நோய்த் தொற்றைத் தடுத்த தொழில்நுட்பம்: 66 கோடி பேர் புனித நீராடிய கங்கையின் சுகாதாரத்தைப் பேணுவதில் பாபா மற்றும் இந்திரா காந்தி அணுசக்தி மையங்களின் பங்களிப்பு இருந்தது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அதனைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
மகா கும்பமேளா நிகழ்வு தொடங்குவதற்கு வெகு நாட்களுக்கு முன்னதாகவே பிரயாக்ராஜில் மும்பை பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம், கல்பாக்கம் இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையம் இணைந்து அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களை அமைப்பதைத் திட்டமிட்டன. அதனைத் தொடர்ந்து, ஹைபிரிட் கிரானுலர் ஸீக்வென்சிங் பேட்ச் ரியாக்டர்ஸ் (Hybrid Granular Sequencing Batch reactors – hgSBR technology) என்றழைக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொகுப்புகளை அங்கே நிறுவின. இதன் மூலம் கழிவுநீரில் இருக்கும் இயற்கையான நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தியே மாசுபாட்டினை அகற்றும் பணியை இடைவிடாது மேற்கொண்டனர்.
இவ்வாறாக பிரயாக்ராஜை சுற்றி அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு மையங்கள் மூலம் அன்றாடம் ஒன்றரை லட்சம் லிட்டர் கங்கை நதி நீர் சுத்திகரிக்கப்பட்டது. மேலும் இது குறைந்த செலவிலும் செய்யப்பட்டது. இதற்காக 11 நிரந்தர சுத்திகரிப்பு மையங்களும் 3 தற்காலிக சுத்திகரிப்பு மையங்களும் இயங்கின. இவற்றை ஃபீக்கல் ஸ்லட்ஜ் ட்ரீட்மென்ட் ப்ளான்ட்ஸ் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்த தொழில்நுட்பத்தை அணுசக்தி கழகத்தின் அதிகாரியான டாக்டர். வெங்கட் நஞ்சரய்யா உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர சுத்தமான குடிநீருக்காக 200 இடங்களில் தானியிங்கி தண்ணீர் வழங்கும் இயந்திரங்களும் நிறுவப்பட்டிருந்தன. அதேபோல் உ.பி. நிர்வாகமும் நதியில் பக்தர்கள் பயன்படுத்திய பூஜைப் பொருட்களை அகழ்ந்து எடுப்பதை தொடர்ச்சியாக செய்துவந்தது. இதனால் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் குப்பைக் கழிவுகள் தேங்குவதும் தடுக்கப்பட்டது.
முன்பெல்லாம் மகா கும்பமேளா நிகழ்வை ஒட்டி காலரா, வயிற்றோட்ட நோய் பாதிப்பு ஏற்படுவது சாதாரணமானதாக இருந்தது. ஆனால், இந்த முறை உத்தரப் பிரதேச அரசு திறந்தவெளியில் மக்கள் மல, ஜலம் கழிப்பதைத் தடுக்க கும்பமேளா பகுதியில் 1.5 லட்சம் கழிவறைகளை ஏற்படுத்தியிருந்தது.
ஒருபுறம் அறிவியல் தொழில்நுட்பம், மறுபுறம் உத்தரப் பிரதேச அரசின் சுகாதார சீர்கேடுகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடு ஆகியன 66 கோடி பேர் நீராடிய மகா கும்பமேளாவில் நோய், தொற்று பரவல் தடுப்பை சாத்தியப்படுத்தியுள்ளது என்கிறார் அமைச்சர் ஜிதேந்திரா சிங்.