கரூர்: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையைக் கண்டித்து, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அரசுப் பள்ளி இளநிலை உதவியாளர் கடிதம் வழங்கியுள்ளார்.
கரூர் மாவட்டம் கடவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிபவர் கா.சிவா (42). ஒரு மாதம் மருத்துவ விடுப்பில் இருந்து வந்த இவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்து, தலைமை ஆசிரியர் (பொ) ஆண்டவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
மத்திய அரசு மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை மேற்கொள்வதைக் கண்டித்தும், இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதியுதவி வழங்கப்படும் என்ற மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்தும் ராஜினாமா செய்வதாக அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ள சிவா ‘கோ பேக் மோடி’ என எழுதிக் கையெழுத்திட்டுள்ளார்.
இதுகுறித்து விவரம் அறிய சிவாவை பலமுறை தொடர்பு கொண்டபோதும், அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஆண்டவரிடம் கேட்டபோது, ‘‘சிவா அளித்த ராஜினாமா கடிதத்தை நான் வாங்க மறுத்து, இதுகுறித்து பேசிக் கொள்ளலாம் என்று தெரிவித்தும், அவர் கடிதத்தை வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளேன்’’ என்றார். இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் சுகானந்தத்திடம் கேட்டபோது ‘‘இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.