ஓசூர்: “நடிகையின் பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக மாட்டேன்,” என்று ஓசூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக வேண்டும் என போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகததால் அவரது வீட்டின் கதவில் போலீஸார் சம்மனை இன்று (பிப்.27) ஒட்டினர். கதவில் ஒட்டப்பட்ட அந்த சம்மனை, அங்கிருந்த காவலர் கிழித்ததாகவும், இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வீட்டு காவலாளி உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்ததாகவும் செய்திகள் வெளியானது.
இது தொடர்பாக ஓசூரில் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது: “என்னால் வரமுடியாது. சென்னை வந்தவுடன் வருவதாக கூறியிருந்தேன். நான் எங்கும் ஓடவில்லை. தினமும் செய்தியாளர்களை சந்தித்து கொண்டுதான் இருக்கிறேன். இன்று ஓசூரில் இருக்கிறேன் என்பது குறித்து போலீஸாருக்கும் தெரியும். நான் வருகிறேன் என்று கூறியும், வீட்டில் சம்மன் ஒட்டி வைத்து, என்னை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர். அதற்கு எல்லாம் நான் அச்சப்பட மாட்டேன்.
நடிகையின் புகார் குறித்த வழக்கை ரத்து செய்யக் கோரி நான்தான் வழக்குத் தொடர்ந்தேன். இருவரையும் உட்கார வைத்து விசாரணை செய்ய வேண்டும். ஜெயலலிதா, எடப்பாடி முதல்வராக இருந்த, கடந்த 10 ஆண்டுகள் அந்த நடிகை (விஜயலட்சுமி) வரவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, என்னை அவர்களால் சாமளிக்க முடியாத நேரங்களிலும், தேர்தல் சமயங்களிலும் இந்த நடிகையை வரழைத்து விடுகின்றனர்.
இந்த வழக்கில் உடனடியாக ஆஜராக என்ன அவசரம் இருக்கிறது? கடந்த 15 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் விசாரணை செய்கின்றனர். இதையே தான் சொல்லி வருகிறேன். இந்த வழக்கில், போலீஸார் அனுப்பியுள்ள சம்மனுக்கு ஆஜராகியே வேண்டும், என்றால் கூட நான் ஆஜராக மாட்டேன். என்ன செய்ய முடியும்?,” என்று அவர் கூறியுள்ளார்.
பின்னணி என்ன? – முன்னதாக, தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னையில் உள்ள வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011-ல் புகார் அளித்திருந்தார். அதையடுத்து போலீஸார் சீமானுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக அண்மையில் நடந்தது. அப்போது ‘‘இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நடிகை விஜயலட்சுமி புகாரை திரும்பப் பெற்றாலும்கூட பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கில் போலீஸார் 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, முதல்கட்டமாக வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு அண்மையில் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று (பிப்.27) சீமானின் வழக்கறிஞர்கள் அவரது சார்பாக நேரில் ஆஜராகினர். சீமான் தற்போது கிருஷ்ணகிரியில் கட்சி ரீதியான பணியில் ஈடுபட்டிருப்பதால் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி காவல்துறையில் விளக்கம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.