கான் யூனிஸ்: இஸ்ரேலுடன் அடுத்த கட்ட சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என ஹமாஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் இடையே கடந்த மாதம் முதல்கட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து இஸ்ரேலில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகள் ஆகியார் விடுவிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் பிணைக் கைதிகள் 4 பேரின் உடல்களை ஹமாஸ் தீவிரவாதிகள் செஞ்சிலுவை சங்கம் மூலம் நேற்று அனுப்பினர். இவர்கள் ஒகாத் யகலோமி, இட்ஸ்ஹக் எல்கரட், ஸ்லோமா மண்ட்சர் மற்றும் சச்சி இதான் என அடையாளம் காணப்பட்டது. இவர்களில் மண்ட்சர்(85) என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி கொல்லப்பட்டார். இவரது உடலை ஹமாஸ் தீவிரவாதிகள் காசா கொண்டு சென்றனர். மற்ற 3 பேர் காசாவுக்கு உயிருடன் கடத்திச் செல்லப்பட்டவர்கள். இவர்கள் எப்படி, எப்போது இறந்தனர் என தெரியவில்லை.
பாலஸ்தீன கைதிகள் 600 பேர் நேற்று விடுவிக்கப்பட்டதை, ஹமாஸ் அமைப்பினர் உறுதி செய்தனர். இவர்களில் பலர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் நடத்த நுழைந்தவர்கள். இவர்களில் சிலர் மகிழ்ச்சியுடன் காசா திரும்பினர். சிலர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். இவர்களில் சிலர் இஸ்ரேல் சிறையில் வழங்கப்பட்ட சட்டையை கழற்றி எரிந்து தீயிட்டு கொளுத்தினர். இந்த 600 பேரையும் கடந்த சனிக்கிழமை அன்றே இஸ்ரேல் விடுவித்திருக்க வேண்டும்.
ஆனால், இஸ்ரேல் பிணைக் கைதிகள் விழா நடத்தி ஒப்படைப்பது அவமானப்படுத்துவதுபோல் உள்ளதாக கூறி கைதிகளை விடுவிப்பதை இஸ்ரேல் தாமதப்படுத்தியது. இதையடுத்து 4 பேரின் உடல்களை விழா நடத்தாமல், செஞ்சிலுவை சங்கம் மூலம் ஹமாஸ் அமைப்பினர் நேற்று ஒப்படைத்தனர். இத்துடன் முதல்கட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் இந்த வாரத்துடன் முடிவடைகிறது. முதல்கட்ட சண்டை நிறுத்தத்தில் இதுவரை 8 உடல்கள் உட்பட 33 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் திருப்பி அனுப்பினர். பதிலுக்கு பாலஸ்தீன கைதிகள் 2,000 பேரை இஸ்ரேல விடுவித்தது.
இந்நிலையில் அடுத்தகட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதில் மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. ‘‘மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தை மூலம் சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்வது மட்டுமே ஒரே வழி. இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடர்ந்தால், பிணைக் கைதிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிக கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும் ’’என ஹமாஸ் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.