IPL 2025 CSK: சாம்பியன்ஸ் டிராபி தொடர் (Champions Trophy 2025) வரும் மார்ச் 9ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அதன்பின் இரண்டு வாரங்கள் இடைவெளியில் 18வது ஐபிஎல் தொடர் (IPL 2025) தொடங்க இருக்கிறது.
IPL 2025 CSK: அதிரடியுடன் தொடங்கும் ஐபிஎல்
மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது. அடுத்த மார்ச் 23ஆம் தேதி மாலை நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் கடந்த முறை 2வது இடம்பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகிறது. தொடர்ந்து அன்று இரவு ஐபிஎல் தொடரின் பிளாக்பஸ்டர் போட்டி நடைபெறுகிறது.
IPL 2025 CSK: சென்னை vs மும்பை பிளாக்பஸ்டர் போட்டி
தலா 5 கோப்பைகளை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் (CSK vs MI 2025) சேப்பாக்கத்தில் மோத இருக்கின்றன. கடந்தமுறை கடைசி இடத்தில் முடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, மெகா ஏலத்தின் மூலம் புது ரத்தத்தை அணிக்குள் பாய்ச்சியிருக்கிறது. அதேநேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கடந்தமுறை பிளே ஆப் செல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்து, 5வது இடத்தில் முடித்தது.
IPL 2025 CSK: சென்னை வந்தார் தோனி
அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) வீரர்கள் பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் (பிப். 25) முதலே சென்னை வரத்தொடங்கி உள்ளனர். தற்போதைய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நேற்று முன்தினம் சென்னை வந்தடைந்த நிலையில், முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி (MS Dhoni) நேற்று சென்னை வந்தார். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
IPL 2025 CSK: தொடங்குகிறது சிஎஸ்கே பயிற்சி முகாம்
இவர்கள் மட்டுமின்றி கலீல் அகமது, அன்சுல் கம்போஜ், தீபக் ஹூடா, ராமகிருஷ்ணா கோஷ், முகேஷ் சௌத்ரி, கமலேஷ் நாகர்கோட்டி, ஷேக் ரஷீத், ஆன்ட்ரே சித்தார்த், குர்ஜப்னீத் சிங், வன்ஷ் பேடி உள்ளிட்ட இந்திய வீரர்கள் பெரும்பாலானோர் பயிற்சி முகாமிற்கு வந்துவிட்டனர். விரைவில் ரவிச்சந்திரன் அஸ்வின், தூபே, விஜய் சங்கர், சாம் கரன், ராகுல் திரிபாதி, ஷ்ரேயாஸ் கோபால், பதிரானா உள்ளிட்டோர் முகாமில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
IPL 2025 CSK: சேப்பாக்கத்தில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியா?
ஜடேஜா, டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, நூர் அகமது, நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன் உள்ளிட்ட ஆறு வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்றிருப்பதால் அவர்களின் போட்டிகள் முடிந்து சில நாள்களில் சென்னை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணி வழக்கம்போல் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே தங்களது பயிற்சியை மேற்கொள்ளுமா அல்லது சென்னை புறநகர் பகுதியில் உள்ள சிஎஸ்கே மைதானத்தில் பயற்சி மேற்கொள்ளுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
IPL 2025 CSK: சிஎஸ்கேவின் நம்பிக்கை நட்சத்திரம் பதிரானா
சாம்பியன்ஸ் டிராபி தொடரும் இன்னும் 10 நாள்களுள் முடிந்துவிடும் என்பதால் அனைவரின் பார்வையும் ஐபிஎல் மீது திரும்பிவிடும். தற்போதே பலரும் வரும் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என கணக்குப் போட தொடங்கிவிட்டனர். அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு யூனிட் எப்படி இருக்கும் என்பதிலும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த சில சீசன்களாகவே தவிர்க்க முடியாத வேகப்பந்துவீச்சாளராக வளர்ந்திருப்பவர் மதீஷா பதிரானா (Matheesha Pathirana). கடந்த சீசனில் காயம் காரணமாக அவர் சில போட்டிகளை விளையாடாதபோதும், அவரை தற்போது ரூ.13 கோடி கொடுத்து சிஎஸ்கே தக்கவைத்திருக்கிறது. அந்தளவிற்கு பதிரானாவின் மீது சிஎஸ்கே நம்பிக்கை வைத்திருக்கிறது. அதேபோல், SA20 எனப்படும் தென்னாப்பிரிக்கா லீக் தொடரில் ஜோபெர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் பதிரானா விளையாடினார்.
IPL 2025 CSK: தடுமாறும் பதிரானா – சோகத்தில் ரசிகர்கள்
ஆனால், பதிரானா அந்த தொடரில் சிறப்பாக விளையாடவில்லை எனலாம். அந்த தொடரில் ஜேஎஸ்கே அணி 10 போட்டிகளில் விளையாடியது. அதில் 1 பிளே ஆப் போட்டியும் அடக்கம். அப்படியிருக்க ஜேஎஸ்கே அணி பதிரானாவை வெறும் 6 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பளித்தது. அந்த 6 போட்டிகளிலும் அவர் 59.33 சராசரியில், 10.47 எகானமி உடன் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியிருந்தார். பதிரானா இவ்வளவு மோசமாக பந்துவீசியது ஜேஎஸ்கே ரசிகர்களை காட்டிலும், சிஎஸ்கே ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது.
காரணம், பதிரானா சமீபத்தில் அவரது ஆக்ஷனை (Pathirana Action Change) சற்று மாற்றியிருக்கிறார். அதாவது, ரிலீஸிங் பாயிண்டை அவர் மாற்றியிருக்கிறார் என்பதால் பேட்டர்களால் அவர் எளிதில் கணிக்க முடிகிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர். அவர் காயத்தில் அடிக்கடி சிக்காமல் இருக்க ஆக்ஷனை மாற்றியிருக்கிறார் என்றாலும், இதனால் அவரது X Factor நீர்த்து போய்விட்டது என்றும் சிலர் கருதுகின்றனர்.
IPL 2025 CSK: பதிரானாவுக்கு பதில் யார்?
எனவே, டெத் ஓவர்களில் சிஎஸ்கே அணி பதிரானாவை நம்புவதற்கு நாதன் எல்லிஸை (Nathan Ellis) உள்ளே கொண்டுவரலாம். நாதன் எல்லிஸ் இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் சரி, சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் சரி, ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் தனது பல்வேறு வேரியேஷன்கள் மூலம் குறைவாகவே ரன்களை கொடுக்கிறார். இது சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு பெரியளவில் உதவும், மற்ற மைதானங்களில் நிச்சயம் கைக்கொடுக்கும். எனவே, பதிரானாவுக்கு பதில் எல்லிஸ் நல்ல தேர்வாகவே இருப்பார்.
IPL 2025 CSK: சிஎஸ்கேவின் வெளிநாட்டு வீரர்கள்
ஓப்பனிங்கில் கான்வே – ரச்சினில் ஒருவருக்கு வாய்ப்பளித்துவிட்டு, சாம் கரன், நூர் அகமது, நாதன் எல்லிஸ் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களுடன் சேப்பாக்கத்தில் விளையாடலாம். சுழலுக்கு உதவாத ஆடுகளங்களில் நூர் அகமதுக்கு பதில் ஜேமி ஓவர்டனை விளையாட வைக்கலாம்.
அந்த வகையில், சாம் கரன் பவர்பிளேவில் ஓரிரு ஓவர்களை வீசுவார். அன்சுல் கம்போஜ் அல்லது கலீல் அகமது ஆகியோரவ் பவர்பிளேவில் 3 ஓவர்களை வீசுவார்கள். அஸ்வின் பவர்பிளேவில் 1 ஓவரை வீச வாய்ப்பிருக்கிறது. மிடில் ஓவர்களில் ஜடேஜா, நூர் அகமது, அஸ்வின் ஆகியோருடன் எல்லிஸ் கைக்கொடுப்பார்.
IPL 2025 CSK: சிஎஸ்கேவின் பந்துவீச்சு காம்பினேஷன்
டெத் ஓவருக்கு எல்லிஸ் மற்றும் ஒரு இந்திய பௌலரை வைத்துக்கொள்ளலாம். ஸ்பின்னர்கள் 17வது, 18வது ஓவர்கள் வரை பந்துவீசலாம். தேவைப்பட்டால் தூபேவையும் மிடில் ஓவர்களில் பந்துவீச வைக்கலாம். சுழலுக்கு சாதகம் இல்லாத ஆடுகளங்களில் ஓவர்டன் பிளேயிங் லெவனுக்குள் வந்தால் அவரையும் மிடில் மற்றும் டெத் ஓவர்களுக்கு வைத்துக்கொள்ளலாம்.
அந்த வகையில், ஒருவேளை பதிரானா சோபிக்காவிட்டால், அவர் இல்லாமலேயே சிஎஸ்கே பந்துவீச்சு காம்பினேஷன் சிறப்பாகவே இருக்கிறது. சாம் கரன், ஜேமி ஓவர்டன், சிவம் தூபே, அஸ்வின், ஜடேஜா, நூர் அமகது, நாதன் எல்லிஸ், அன்சுல் கம்போல், கலீல் அகமது ஆகியோரே சிஎஸ்கேவின் பந்துவீச்சு காம்பினேஷனில் இருப்பார்கள் எனலாம்.