D55 : `நற்றுணையாவதும் நமச்சிவாயமே..!’ – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் ட்வீட்

கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் திரைப்படம் இந்தியளவில் பெரும் வரவேற்பை பெற்றது. நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு திரையுலகில் பெரும் கவனத்தை பெற்றுத்தந்தப் படம். இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இது தொடர்பாக சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்திருந்த ராஜ்குமார் பெரியசாமி, “நான் நடிகர் தனுஷை முதல்முறை சந்திக்கும்போது என்னிடம் எந்தக் கதைக்கான ஐடியாவும் இல்லை.

நான் திரையில் இப்படி தெரிய வேண்டும், நான் இப்படியான கதாபாத்திரத்தில்தான் நடிக்க வேண்டும், இப்படியான சில கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என எந்த பாராமீட்டரும், விதிகளும் அவரிடம் இல்லை. இரண்டாவது முறை நான் அவரைச் சந்தித்து அவரிடம் இரண்டு கதைக்கான ஐடியாவைச் சொன்னேன். அந்த இரண்டு ஐடியாவுமே அவருக்குப் பிடித்திருந்தது. அதில் ஒரு கதையில்தான் தற்போது கவனம் செலுத்தி வேலை செய்து வருகிறோம். இந்தக் கதையும் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான்.” என்றார்.

இந்த நிலையில், தனுஷ் நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கும் செய்தியை அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “இந்த மகாசிவராத்திரி நன்னாளில், சிவபெருமான் நமக்கு அமைதி, நேர்மறை எண்ணம், செல்வம் மற்றும் ஆசிர்வாதத்தை அளிப்பார். தனுஷ் 55. நற்றுணையாவதும் நமச்சிவாயமே” எனக் குறிப்பிட்டிருக்கிறார். கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் மதுரை அன்பு செல்வன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்கும் எனவும், மற்ற நடிகர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.