அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், G.V. பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கிங்ஸ்டன்’.
இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் G.V. பிரகாஷ், இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் புதிதாகத் தொடங்கியிருக்கும் ‘பேர்லல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்’ இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. அக்ஷன், கடல் அட்வென்ச்சர்கள் நிறைந்த இத்திரைப்படம், வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இதையொட்டி இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. இவ்விழாவிற்கு வெற்றிமாறன், பா.ரஞ்சித், அஸ்வத் மாரிமுத்து, சுதா கொங்கரா உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்விழாவில் பேசியிருக்கும் இயக்குநர் சுதா கொங்கரா, “G.V. பிரகாஷுக்கு சினிமா மேல அவ்வளவு ஆர்வமும், காதலும் இருக்கு. இசை, நடிப்பு, தயாரிப்பு என எல்லாத்துலயும் அதைப் பார்க்கலாம். இதையெல்லாம் அவர் சொல்ல மாட்டார். செயலில்தான் காட்டுவார். புதுபுதுசாக எதையாவது பண்ணனும்னு சொல்லிட்டே இருப்பார். அதை செய்து காட்டுவார். அவரோட ‘பேர்லல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் என்னுடையது போலதான்” என்று மகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.