மக்கள் மனதைக் கவர்ந்தவர் பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் கடந்த 60 ஆண்டுகளாக, மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம் எனப் பல்வேறு மொழிகளில் 80000-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை பாடியுள்ளார்.
கடந்த ஜனவரி 10 ஆம் தேதி அன்றுதான் யேசுதாஸ் தனது 85-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இந்த நிலையில், கே.ஜே.யேசுதாஸ் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சென்னை மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருதவாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பானது. இதனால் ரசிகர்கள் வேதனை அடைந்தனர்.

இந்த நிலையில், இந்த தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகள்தான் என்று மறுப்பு தெரிவித்துள்ள அவரது மகன் விஜய் யேசுதாஸ், “எனது தந்தை யேசுதாஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் உண்மையல்ல, அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் அமெரிக்காவில் உள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய கே.ஜே.யேசுதாஸின் மேலாளர் சேது ஐயல், “கே.ஜே.யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வந்த செய்திகள் அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள். அவர் நலமாக இருக்கிறார். இந்த ஊகங்களை மறுக்குமாறு ஊடகங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அவர் தற்போது தனது மனைவி பிரபாவுடன் அமெரிக்காவில் வசிக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.