Kumbh Mela : புனித நீர் டெலிவரி டு VR குளியல் – கும்ப மேளாவில் புதிது புதிதாய் உதயமான நவீன தொழில்கள்

Kumbh Mela

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும், சிறப்பு மகா கும்பமேளா உத்தரபிரதேசம் மாநிலம் பிரயக்ராஜில் 44 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. கிட்டத்தட்ட 60 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். 40,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிகழ்வுக்காக ரூ.7,500 கோடி செலவழித்துள்ளது அரசு. இது உத்தரபிரதேசம் ஜி.டி.பி-யில் 1% அளவு, அதாவது 2 லட்சம் கோடி பங்களித்துள்ளது.

இந்தியாவின் ஆன்மிக பெருமையை உலகம் அறிய செய்துள்ளது கும்பமேளா என பாஜக அரசு பெருமை தெரிவித்துள்ளது. 144 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்தியாவில் எத்தனை பிரம்மாண்டமாக இருந்திருக்கும் எனக் கூறமுடியாது. ஆனால் 2025 மகா கும்பமேளா பல வழிகளில் தனிச்சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக ஆன்மிகத்துடன் தொழில்நுட்பத்தை கலந்தது என்றுதான் கூற வேண்டும்.

இது நவீன நடைமுறையா, அல்லது சில அமைப்புகள், தனிமனிதர்களின் வியாபார யுத்தியா? என்பதை நீங்கள் முடிவு செய்துகொள்ளலாம். கும்பமேளாவை நவீனமாக கொண்டுசென்ற சில நிகழ்வுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டிலேயே மகா கும்பமேளா தண்ணீர் மற்றும் பிரசாதம்

60 கோடி மக்கள் கலந்துகொண்டாலும், இதில் கலந்து கொள்ள விரும்பி, முடியாதவர்களும் இருந்தனர். அவர்களுக்காகவே பணியாற்றியது ஒரு செயலி. கடந்த அக்டோபர் 2022ல் தொடங்கப்பட்ட வாயு (Waayu) என்ற கமிஷன் இல்லாத உணவு டெலிவரி நிறுவனம் ஓ.என்.டி.சி உடன் இணைந்து மகா கும்பமேளா பிரசாதம் மற்றும் தண்ணீரை நாடுமுழுவதும் டெலிவரி செய்தது.

கும்பமேளா பிரசாதம் மற்றும் தண்ணீர்

இந்த செயலி கிட்டத்தட்ட 1 லட்சம் பிரசாதங்களை டெலிவரி செய்துள்ளதாக அதன் சி.இ.ஓ தெரிவித்துள்ளார். அதில் 40% ஆர்டர்கள் பெங்களூரு, மும்பை, டெல்லி, புனே, ஹைத்ராபாத் போன்ற நகரங்களிலிருந்து பெறப்பட்டதாக கூறியுள்ளார்.

வாரணாசி, அயோத்தி மற்றும் பிரயக்ராஜ் நகரங்களிலிருந்து பாரம்பரிய முறையில் தூய்மையாக செய்யப்பட்ட லட்டுவும், பிரயக்ராஜ் நதியில் நேரடியாக சேமிக்கப்பட்ட தண்ணீரும் இந்த ஆர்டரில் வழங்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் நீராடல்

பிரயக்ராஜைச் சேர்ந்த தீபக் கோயல் என்பவர், 1,100 ரூபாயுடன் உங்கள் புகைப்படத்தை அனுப்பினால், அதனை புனித தண்ணீரில் நனைத்து எடுப்பார்.

அப்படி உங்கள் புகைப்படத்தை புனித நீரில் நனைத்ததற்க்கான வீடியோவையும் அனுப்பிவைப்பார்.

இந்த முயற்சிக்கு இணையத்தில் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கருத்துகள் வந்தன.

வீடியோகால் புனித நீராடல்

இதேப்போல புனித நீராட வந்த ஒரு பெண்மணி, கங்கைக்கு வரமுடியாத அவரது கணவருக்கு வீடியோகால் செய்து மொபைலை தண்ணீரில் முக்கி புனித நீராட வைத்தார். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

ஏஐ வழிகாட்டி

வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு வழியும், உடனடி தகவல்களும் தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடியால் Kumbh Sah AI yak என்ற செயற்கை நுண்ணறிவு தளம் தொடங்கிவைக்கப்பட்டது.

ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் இந்த ஏஐ தளம் தகவல் அளிக்கும். இதை மகா கும்பமேளா செயலியிலும் வாட்ஸ்அப் மூலமாகவும் அணுக முடிந்தது.

குடும்பத்துடன் வீட்டிலேயே கும்பமேளா… ரூ.1 லட்சம் மட்டும்!

கும்பமேளா சென்றவர்கள் Divya Jyoti Jagriti Sansthan camp அருகில் பல மெய்நிகர் மண்டலங்கள் இருந்ததை பார்த்திருக்கலாம். கும்பமேளாவின் பிரம்மாண்டத்தை வீடியோ எஃபெக்டுகள் மற்றும் 3டி -யில் காண இது அரிய வாய்ப்பு.

நீங்கள் கும்பமேளாவுக்கு செல்லவில்லை என்றாலும் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வீட்டிலேயே புனித நீராடிய அனுபவத்தைப் பெறலாம். அதற்காகவே VirtualKumbh என்ற தொழிலை தொடங்கியிருக்கின்றனர்.

Virtual Kumbh

புனித நீராட தேவையான திரிவேணி சங்கம் நீர், 360 டிகிரி மகா கும்பமேளாவைப் பார்ப்பதற்கான மெய்நிகர் பெட்டி, தண்ணீர் பிடிக்கும் டப் என எல்லாவற்றையும் கொடுத்துவிடுவார்கள். இதில் பல தொகைகளுக்கு பலவகையான சேவைகள் வழங்கப்படுகின்றன.

காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான டிஜிட்டல் மையம்

லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும்போது, யாராவது தொலைந்துபோவது இயல்பானதுதான். அதற்காக டிஜிட்டல் மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்த மையங்கள் ஏற்கெனவே ஸ்கேன் செய்து வைக்கப்பட்ட முகங்களை எளிதாக அடையாளம் கண்டுபிடித்துவிடும். பேஸ்புக், ட்விட்டர் வழியாக எளிமையாக தகவலைப் பரப்பி கண்டிபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இது செயல்பட, முன்னதாகவே முகங்களை அந்த மையங்களில் ஸ்கேன் செய்ய வேண்டியது அவசியம்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.