இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமைகளாகக் குறிப்பிடப்பட்டிருப்பவற்றில் ஒன்று, ‘அறிவியல் மனப்பான்மையையும் மனிதநேயத்தையும் வளர்ப்பது.’ அறிவியல் மனப்பான்மை என்பது ஒருவரது தர்க்க – பகுத்தறிவு சார்ந்த மனப்பான்மை. அதாவது எந்த ஒரு விஷயத்தையும் நாம் தர்க்கரீதியாகவும் பகுத்தறிந்தும் அணுகுகிறோம் என்றால் நாம் அறிவியல் மனப்பான்மையுடன் இருக்கிறோம் என்று பொருள்.
தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இந்நாளில் அறிவியல் மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் நம்மால் நடைமுறை வாழ்க்கைக்குச் சாத்தியமான முடிவுகளை எடுக்க முடியும். நம் கண் முன் நடப்பவை குறித்தும் நமக்குச் சொல்லப்படுபவை குறித்தும் அறிவியலின் துணையோடு பகுத்தறிந்து சிந்தித்து முடிவெடுக்க முடியும். அறிவியலுக்குப் புறம்பான தகவல்களையும் செயல்பாடுகளையும் புறக்கணிக்க முடியும்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு தனது ‘தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ நூலில்தான் ‘அறிவியல் மனப்பான்மை’ என்கிற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார். ‘அறிவியல் மனப்பான்மை’ குறித்து பாம்பேயில் உள்ள நேரு மையம் சார்பாக அறிஞர் குழுவினரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை 1981இல் வெளியிடப்பட்டது. அது அறிவியல் மனப்பான்மையை ஏன் நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான மூன்று அடைப்படைக் காரணங்களைச் சொல்கிறது.
1. நாம் அறிவைப் பெறுவதற்கான சாத்தியமான வழிமுறைகளை அறிவியல் மனப்பான்மையே தருகிறது.
2. அறிவியல் முறைப்படி பெற்ற அறிவின் மூலமே மனித குலத்தின் பிரச்சினைகள் ஆராயப்பட்டுத் தீர்வு காணமுடியும்.
3. அன்றாட வாழ்க்கையில் மனிதனின் ஒவ்வொரு முயற்சிக்கும், பொது வாழ்க்கை நெறிமுறைகள் தொடங்கி அரசியல் – பொருளாதாரம் வரை அனைத்துக்கும் அறிவியல் மனப்பான்மையின் அடிப்படையிலான அணுகுமுறையே மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு உதவும்.
சமூகத்தில் அனைவரையும் உள்ளடக்கிய, அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க அடிப்படை பண்புதான் ‘அறிவியல் மனப்பான்மை.’
பிப்.28 – இன்று தேசிய அறிவியல் நாள்