நெல்லை: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உற்சாகமாக நிகழ்ச்சிகளில் பேசினார். தேசிய கல்விக் கொள்கை தொடர்பான அவரது வலைதள பதிவு தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார பதியில் வழிபாடு செய்தது குறித்து திருநெல்வேலியில் நடைபெற்ற அய்யா வைகுண்டர் அவதார தின விழாவில் அவர் உணர்வுபூர்வமாக குறிப்பிட்டு பேசும்போது, “திருச்செந்தூரில் அய்யா வைகுண்டரை வியாழக்கிழமை தரிசித்தேன். திருச்செந்தூருக்கு நான் வருவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பும் இங்கு முருகப் பெருமானை தரிசிக்க வந்தேன். திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கும், வைகுண்டருக்கும் பிரசித்தி பெற்றது. திருச்செந்தூருக்கு அய்யா வைகுண்டரை தரிசிக்க சென்றபோது கடல் அலைகளில் ஆன்மிக அதிர்வலைகளை உணர முடிந்தது” என்று தெரிவித்தார். தனது பேச்சின் தொடக்கத்திலும், இறுதியும் அய்யா உண்டு என்று தமிழில் அவர் குறிப்பிட்டது அய்யாவழி பக்தர்களை கவர்ந்தது.
தனது சுற்றுப்பயணத்தின் முதல் நாளில் கேடிசி நகரிலுள்ள ஹோட்டலில் வணிகர்கள், கல்வியாளர்களுடனும், பாஜக, இந்து முன்னணி பிரமுகர்களுடனும் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கலந்துரையாடினார். இது தொடர்பாக நேற்று காலையில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஆளுநர் பல்வேறு புகைப்படங்களுடன் தனது கருத்துகளை பதிவிட்டிருந்தார். “தென்தமிழ்நாட்டை சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர்கள், பெண் தொழில் முனைவோர், சிறு, குறு நடுத்த நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த உள்ளூர் தலைவர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடினேன்.
ஏராளமான சிரமங்கள் மற்றும் முறைசார் தடங்கல்கள் இருந்தபோதிலும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் இவர்களின் நேர்மறையான ஆற்றலையும், தொழில்முனைவு திறனையும் காண்பது ஊக்கமளிப்பதாக இருந்தது. இந்த பகுதி மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. ஆனாலும், இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வை தருகிறது.
தொழில் மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் தங்களுக்கு வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக உணர்கிறார்கள். இளைஞர்களிடையே காணப்படும் போதைபொருள் பழக்கம், போதைபொருள் துஷ்பிரயோகத்தின் சிக்கல்கள் தீவிரமானவை, ஊடக தலைப்பு செய்திகளில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட போராட்டங்களுக்கு மாறாக, தேசிய கல்வி கொள்கை 2020-ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது.
மாநில அரசின் கடுமையான இருமொழி கொள்கை சாதாரணமாக அண்டை மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும்கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது. மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலி நிகழ்ச்சிக்குபின் ஆளுநரின் இந்த பதிவு தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை மாணவ, மாணவியருடன் கலந்துரையாடியபோது, தன்னை குறித்தும் தனது அடையாளங்கள் குறித்தும், தனது வளர்ச்சி குறித்தும் ஆளுநர் உற்சாகமாக குறிப்பிட்டு பேசினார். இம்மாத தொடக்கத்தில் திருநெல்வேலியில் 2 நாட்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சென்றிருந்த நிலையில், தமிழக ஆளுநரின் 2 நாள் சுற்றுப்பயணம் கவனம் பெற்றதாக மாறியிருக்கிறது.