கொல்கத்தா: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை அழைத்துவர ஏன் விமானத்தை அனுப்பவில்லை என்று மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியதாவது: தேர்தல்கள் நெருங்கும் போதெல்லாம் ஊடுருவல் பற்றி பாஜக பேசுகிறது. ஆனால் நமது குடிமக்கள் அமெரிக்காவில் இருந்து சங்கிலியால் பிணைக்கப்பட்டு நாடு கடத்தப்படுகின்றனர். இது நாட்டுக்கு அவமானகரமான விஷயம்.
நமது நாட்டு மக்கள் மரியாதையுடன் திரும்பி வருவதை மத்திய அரசு உறுதி செய்திருக்க வேண்டும். கொலம்பியா தனது குடிமக்களை அமெரிக்காவில் இருந்து திரும்ப அழைத்துவர விமானத்தை அனுப்புகிறது. மத்திய அரசு ஏன் விமானத்தை அனுப்பவில்லை?
தேர்தல் ஆணையத்தின் ஆசீர்வாதத்துடன் வாக்காளர் பட்டியலை பாஜக எவ்வாறு கையாள்கிறது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் குஜராத்தில் போலி வாக்காளர்களை சேர்த்து தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடந்தால் மேற்கு வங்கத்தில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்பதை பாஜக அறிந்துள்ளது. எனவே, ஹரியானா மற்றும் குஜராத்தில் இருந்து போலி வாக்காளர்களை கொண்டு வந்து மேற்கு வங்கத்தில் வெற்றிபெற அக்கட்சி முயற்சிக்கும்.
2006-ல் நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்பு இயக்கத்தின் போது என்னால் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிந்தது. இதுபோல் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் நாம் ஓர் இயக்கத்தை தொடங்கலாம். தேவைப்பட்டால், வாக்காளர் பட்டியலை சரிசெய்து போலி வாக்காளர்களை நீக்கக் கோரி தேர்தல் ஆணைய அலுவலகம் முன் காலவரையற்ற தர்ணாவில் ஈடுபடலாம். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.