புதுடெல்லி: ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டுக்குள் இறுதி செய்வது குறித்து இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கூட்டமைப்பு ஒரே நாணயம், ஒரே விசா நடைமுறையை பின்பற்றுகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக உர்சுலா வோன் டெர் லியென் பதவி வகிக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த சூழலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென் இரு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். முதல் நாளில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை, உர்சுலா வோன் டெர் லியென் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்த ஆண்டுக்குள் கையெழுத்திட இரு தலைவர்களும் உறுதி பூண்டனர். விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சைபர் பாதுகாப்பு, தீவிரவாத தடுப்பு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பும் இணைந்து செயல்படுவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இரு தலைவர்களும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென் கூறியதாவது:
நான் கடந்த ஆண்டு டிசம்பரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக மீண்டும் பதவியேற்றேன். எனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளேன். இந்தியாவின் விருந்தோம்பல் என்னை நெகிழச் செய்தது. இது சாதாரண நாள் கிடையாது. வரலாற்று சிறப்புமிக்க நாள் ஆகும். தற்போது விண்ணில் ஒரே நேர்கோட்டில் 7 கோள்கள் அணிவகுத்துள்ளன. இதேபோல பூமியில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நம்பகமான நட்பு நாடு இந்தியா. ஏற்கெனவே இருதரப்பு வர்த்தகம் அபரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இருதரப்பு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வியக்க வைக்கின்றன. வர்த்தகம், தொழில்நுட்பம், விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, தீவிரவாத தடுப்பு, சைபர் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்றிணைந்து செயல்படும். இவ்வாறு உர்சுலா வோன் டெர் லியென் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய நட்புறவு நீடித்து வருகிறது. வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், முதலீடு, புதுமை கண்டுபிடிப்புகள், பசுமை எரிசக்தி, திறன்சார் மேம்பாடு, வாகன போக்குவரத்து, 6ஜி, சைபர் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாத தடுப்பு உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பும் இணைந்து செயல்படும்.
இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து பசுமை ஹைட்ரஜன் மன்றம், காற்றாலை எரிசக்தி வர்த்தக அமைப்பை உருவாக்கும். இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தட திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டப்படுகிறது. இந்த வழித்தடம் சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமையும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
சீனாவுக்கு சவால் விடும் தங்க சாலை: கடந்த 2023-ம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா-மத்திய கிழக்கு- ஐரோப்பா பொருளாதார வழித்தட திட்டம் (ஐஎம்இசி) அறிவிக்கப்பட்டது. இதில் இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி நாடுகள் கையெழுத்திட்டன. இது, ‘தங்க சாலை’ திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஐ.எம்.இ.சி. வழித்தடம் சுமார் 6,000 கி.மீ. நீளம் கொண்டதாகும். இதில் 3,500 கி.மீ. தொலைவு கடல் வழி பாதை ஆகும். இந்தியாவின் மும்பையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜபல் அலி, அல் குவைபத், சவுதி அரேபியாவின் ஹரத், ரியாத், அல் ஹதீதா, இஸ்ரேலின் ஹைபா வழியாக கிரீஸ் நாட்டின் பிரேயஸ் நகரை ஐஎம்இசி வழித்தடம் சென்றடையும்.
புதிய வழித்தடத்தின் மூலம் இந்தியாவின் தயாரிப்புகள் மிக விரைவாக ஐரோப்பிய நாடுகளை சென்றடையும். தற்போது இந்தியாவில் இருந்து புறப்படும் சரக்கு கப்பல் ஜெர்மனியை சென்றடைய சுமார் 36 நாட்கள் ஆகிறது. புதிய வழித்தடம் செயல்பாட்டுக்கு வரும்போது 14 நாட்களில் இந்திய சரக்குகள், ஜெர்மனியை சென்றடையும்.
இதனிடையே மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளை கடல், ரயில், சாலை வழியாக இணைக்கும் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தை சீனா முன்னெடுத்து செல்கிறது. இந்த திட்டத்துக்கு இந்தியாவின் தங்க சாலை (ஐஎம்இசி) மிகப்பெரிய சவாலாக அமையும். ஐஎம்இசி திட்டத்தை செயல்படுத்த இத்தாலி பிரதமர் மெலோனி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென் ஆகியோர் அதிதீவிரம் காட்டி வருகின்றனர்.
6 ‘யுபிஐ.. அபாரம்’ கைதட்டிய உர்சுலா: ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா நேற்று டெல்லியில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்று பொருட்களை வாங்கினார். அப்போது, அவருடன் சென்ற ஐரோப்பிய ஒன்றிய தூதர் ஹெர்வி, ‘யுபிஐ’ மூலம் பணம் செலுத்தினார். ‘பணம் சென்றடைந்தது’ என்ற தகவலுடன் ஒலி கேட்டதும், ஆச்சரியத்துடன் குதூகலித்த உர்சுலா, “இந்த பரிவர்த்தனை அபாரமாக இருக்கிறதே.. சபாஷ்” என்று கூறி, கைகளைதட்டி பாராட்டினார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.