இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே 2025 இறுதிக்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடையற்ற வர்த்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி, “ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். இது ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் மட்டுமல்ல. ஒரு நாட்டில் ஐரோப்பிய ஆணையம் விரிவான ஈடுபாடு காட்டுவதும் இதுவே முதலாவதாகும்.

இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான இந்த இருபது ஆண்டுக்கால ஒத்துழைப்பு இயற்கையானது, ஆக்கபூர்வமானது. நேற்றிலிருந்து இன்று வரை பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் நிலையிலான கிட்டத்தட்ட 20 கூட்டங்களை நாங்கள் நடத்தியுள்ளோம். பல்வேறு பிராந்திய, உலகளாவிய விஷயங்கள் குறித்து அர்த்தமுள்ள விவாதங்கள் நடத்தப்பட்டன. நமது நட்புறவை மேம்படுத்தவும், விரைவுபடுத்தவும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, புதுமைக் கண்டுபிடிப்பு, பசுமை வளர்ச்சி, பாதுகாப்பு, திறன், போக்குவரத்து ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் பரஸ்பரம் பயனளிக்கும் இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யுமாறு எங்கள் குழுக்களுக்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் அவர், குறை கடத்திகள், செயற்கை நுண்ணறிவு, உயர் செயல்திறன் கணினி, 6-ஜி ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். விண்வெளித்துறையில் ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். பசுமை ஹைட்ரஜன் மன்ற கூட்டம், கடலோர காற்றாலை எரிசக்தி வர்த்தக உச்சி மாநாடு ஆகியவற்றை நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். மின்சார வாகன பேட்டரிகள், பசுமை ஹைட்ரஜன் ஆகியவற்றில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். நீடித்த நகர்ப்புற வளர்ச்சிக்கான கூட்டுத் திட்டத்தையும் நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம்.

போக்குவரத்து இணைப்புத் துறையில், இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை முன்னெடுத்துச் செல்ல உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். உலக வர்த்தகம், நீடித்த வளர்ச்சி, வளத்தை முன்னெடுத்துச் செல்லும் அம்சமாக இந்த வழித்தடம் செயல்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் நமது வளர்ந்து வரும் ஒத்துழைப்பு, நமது பரஸ்பர நம்பிக்கையின் அடையாளமாகும். இணையதளப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வோம்.

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தோ பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியில் சேருவதற்கான ஐரோப்பிய யூனியனின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இந்தோ-பசிபிக் பிராந்தியம் மற்றும் ஆப்பிரிக்காவில் நீடித்த, உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திட்டங்களில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்.

இரு நாட்டு மக்களுக்கு இடையேயான இணைப்பே நமது உறவின் வலுவான சொத்து. இன்று, நம்மிடையே கல்வி, ஆராய்ச்சி, தொழில்துறை கூட்டாண்மை ஆகியவற்றை அதிகரிக்க புதிய உடன்பாட்டை எட்டியுள்ளோம். இந்தியாவின் இளம் திறமைசாலிகளும், ஐரோப்பாவின் புதுமைப் படைப்புகளும் இணைந்து எல்லையற்ற வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

ஐரோப்பிய யூனியனின் புதிய விசா நடைமுறையை நாங்கள் வரவேற்கிறோம். இது இந்தியாவின் திறமையான இளைஞர்களின் திறன்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும். 2025-ம் ஆண்டுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் ஒத்துழைப்புக்கான வலுவான பாதையை உருவாக்க இன்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது அடுத்த இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டின் போது அறிமுகப்படுத்தப்படும்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.