டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், சிக்கிய 57 தொழிலாளர்களில் 32 தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய 25 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பத்ரிநாத் கோயிலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) முகாமுக்கு அருகே இந்த பனிச்சரிவு ஏற்பட்டதால் அங்கு சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் அதில் சிக்கி கொண்டனர். அவர்கள் தங்கியிருந்த வீடுகளும் பனிச்சரிவால் மூடப்பட்டன. பனிச் சரிவில் சிக்கிய 57 பேரில் 32 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில் 25 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மாநில பேரிடர் மீட்பு குழு (எஸ்டிஆர்எப்), தேசிய பேரிடர் மீட்பு படை , மாவட்ட நிர்வாகம், இந்தோ-திபெத் எல்லை காவல் படை (ஐடிபிபி) மற்றும் பிஆர்ஓ குழு இணைந்து சம்பவம் நடந்த இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பிஆர்ஓ செயல் பொறியாளர் சிஆர் மீனா கூறுகையில், “ மனா கிராமத்தில் பனிச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், அங்கு அனுப்பி வைக்கப்பட்ட நான்கு ஆம்புலன்ஸ்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகளில் 60-65 பேர் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
சம்பவம் அறிந்தவுடன் உரிய மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சமோலி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ பனிச்சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர் சகோதரர்கள் அனைவரும் பாதுகாப்புடன் மீட்கப்பட பத்ரிநாதரை வேண்டிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் உள்ளிட்ட பல மலைப்பாங்கான பகுதிகளுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே விடுத்திருந்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு வரை 20 செ.மீ. வரையிலான கடும் பனிப்பொழிவு இருக்கும் என அது தெரிவித்திருந்தது. கனமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கான வாய்ப்பிருப்பதாகவும், இதனால் போக்குவரத்துக்கு பெரிய அளவில் இடையூறு ஏற்படும் என்றும் வானிலை மையம் ஏற்கெனவே கணித்திருந்தது.