புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில், எல்லைப் பகுதிகளில் சாலைகள் அமைக்கும் ராணுவப் பிரிவைச் சேர்ந்த 57 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களில் 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்ற 41 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமோலி மாவட்டத்தில் உள்ள எல்லை கிராமமான மனா அருகே வெள்ளிக்கிழமை (பிப்.28) காலை ஏற்பட்ட பனிச்சரிவில், எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) எனும் ராணுவப் பிரிவைச் சேர்ந்த 57 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து, அவர்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபடத் தொடங்கியது. மீட்புப் பணி தொடர்பாக பேசிய முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சமோலியில் பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்களில் 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பணியாளர்கள் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். மீதமுள்ளவர்களைக் காப்பாற்ற முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீட்புப் பணியில் ஐடிபிபி (ITBP) மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மையம்: பிப்ரவரி 27 அன்று 2,400 மீட்டருக்கு மேல் உள்ள இடங்களில் பனிச்சரிவு எச்சரிக்கையை சண்டிகரில் உள்ள பாதுகாப்பு புவி தகவல் ஆராய்ச்சி நிறுவனம் (DGRE) வெளியிட்டது. சாமோலி, உத்தரகாசி, ருத்ரபிரயாக், பித்தோராகர் மற்றும் பாகேஷ்வர் மாவட்டங்களில் 2,400 மீட்டருக்கு மேல் உள்ள இடங்களுக்கு 24 மணி நேர பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், டேராடூனில் உள்ள வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை காலை இந்த மாவட்டங்களில் 3,500 மீட்டர் மற்றும் அதற்கு மேல் உள்ள இடங்களில் கனமழை மற்றும் பனிப்பொழிவு ஏற்படும் என்றும் கணித்துள்ளது. இதைத் தொடர்ந்து, உத்தராகண்ட் அரசு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.
பணியில் இருந்த தொழிலாளர்கள்: மனா மற்றும் மனா கணவாய்க்கு இடையில் ஏற்பட்ட பனிச்சரிவில் இவர்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சாமோலி மாவட்ட ஆட்சியர், மனா மற்றும் மனா கணவாய்க்கு இடையில் காலையில் பனிச்சரிவு ஏற்பட்டபோது 57 தொழிலாளர்கள் முகாமில் இருந்தனர்.
இவர்கள் திபெத் எல்லையை நோக்கிய ராணுவ நகர்வுக்கான பாதையில் வழக்கமான பனி அகற்றும் பணிகளைச் செய்து கொண்டிருந்தார்கள். தற்போது வரை உயிரிழப்பு குறித்த தகவல் இல்லை. மீட்புக் குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக, மீட்புப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருகின்றன” என்று கூறினார்.
உத்தராகண்ட் முதல்வரிடம் அமித் ஷா பேச்சு: இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, பனிச்சரிவில் சிக்கி அணுக முடியாத இடங்களில் உள்ள அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதே அரசாங்கத்தின் முன்னுரிமை என்று அவர் கூறினார்.