புதுச்சேரி: ஆரோவில் உதய தினத்தையொட்டி மாத்ரி மந்திரில் ‘போன்பயர்’ ஏற்றி கூட்டு தியானம் நடைபெற்றது.
மனிதகுல ஒருமைப்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட ஆரோவில் சர்வதேச நகரம் புதுவையில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆரோவில் நகரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர்.
அரவிந்தர் ஆசிரம அன்னையின் முயற்சியால், 1968 பிப்ரவரி 28-ம் தேதி ஆரோவில் சர்வதேச நகரம் ஆரம்பிக்கப்பட்டது. எனவே, ஆண்டுதோறும் ஆரோவில் உதய நாளில் கூட்டுத் தியானம் நடத்தப்படும்.
உதய தினமான நேற்று, ஆரோவில்லில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், மாத்ரி மந்திர் (அன்னையின் இல்லம்) அருகில் அமைந்துள்ள ஆம்பி தியேட்டரில் அதிகாலை 5 மணிக்கு கூடினர், அங்கு, ‘போன் பையர்’ ஏற்றி, உலக அமைதி வேண்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களும் இதில் பங்கேற்றனர். தியானத்தின்போது ஆரோவில் சாசனம் ஒலிபரப்பப்பட்டது.
‘போன் பயர்’ தீப்பிழம்பின் பின்னணியில், மாத்ரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது அனைவரையும் பரவசப்படுத்தியது. தொடர்ந்து ஆரோவில்வாசிகள் ஒருவருக்கொருவர் ஆரோவில் உதய தின வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர்.