எஸ்.பாலசந்திரன் ஓய்வு – வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவராக பி.அமுதா நியமனம்

சென்னை: எஸ்.பாலசந்திரன் வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றதை அடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புதிய தென் மண்டல தலைவராக பி.அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். ராணி மேரி கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்ற பி.அமுதா, 1991-ம் ஆண்டு முதல் வானிலை ஆய்வு மையத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி வந்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டு பி.எச்டி பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலச்சந்திரன் ஓய்வு: கடந்த 2016-ம் ஆண்டு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக பதவி உயர்வு பெற்றவர் எஸ்.பாலசந்திரன். 2018-ம் ஆண்டு, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் என்ற உயர் பதவியையும் அடைந்தார். 6 ஆண்டுகளுக்கு மேல் இப்பதவியில் பணியாற்றிய இவர், 50-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். இவர் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக இருந்தபோது, வானிலை நிலவரங்களை, அதன் இணையதளத்தில் தமிழில் வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தினார்.

அடுத்த 3 மணி நேரத்துக்கான வானிலை நிலவரம் வெளியிடுதல், சமூகவலை தளங்களில் வானிலை முன்னறிவிப்புகளை உடனுக்குடன் தமிழில் வெளியிடுதல் போன்ற சேவைகளையும் அறிமுகப்படுத்தினார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் அதிக அளவில் வானிலை தரவுகளை பெறுவது மற்றும் வானிலை கணிப்பை மேம்படுத்த ஏராளமான கருவிகளை நிறுவினார்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின், சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள எக்ஸ்-பேண்ட் வகை ரேடாரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோது, வானிலையை கணிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது இஸ்ரோவுடன் இணைந்து, உள்ளூர் தொழில்நுட்பத்தில் உதிரி பாகங்களை உருவாக்கி செயல்பட வைத்தவர். மேலும் எக்ஸ்-பேண்ட் வகை ரேடாரையும் பள்ளிக்கரணையில் நிறுவ நடவடிக்கை எடுத்தார். இவரது நடவடிக்கையால் சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளில் வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவது மேம்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.