காசா போர் நிறுத்தத்தின் 2-ம் கட்டத்தை செயல்படுத்துவது எப்படி? பேச்சுவார்த்தை தொடங்கியது

காசா:

இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டுக்கு மேல் நீடித்த போரை நிறுத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில், காசா முனையில் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. அதேபோல், காசாவில் தாக்குதலை நிறுத்தவும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

அதன்படி காசாவில் போரை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. முழுமையான போர்நிறுத்தம், காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுதல் மற்றும் பணயக் கைதிகளை விடுவித்தல் உள்ளிட்ட அம்சங்களை செயல்படுத்தும் வகையில் போர்நிறுத்த ஒப்பந்தம் மூன்று கட்டங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது,

போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை விடுதலை செய்ய இஸ்ரேல் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதன்படி போர் நிறுத்தம் ஜனவரி 19-ம் தேதி அமலுக்கு வந்தது. கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி இரு தரப்பிலும் உள்ள கைதிகள் ஒப்படைக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினர் எட்டு பேரின் சடலங்கள் உள்பட 33 பணயக்கைதிகளை திருப்பி அனுப்பியுள்ளனர். இதற்கு ஈடாக கிட்டத்தட்ட 2,000 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.

ஆறு வாரகால முதல் கட்ட போர்நிறுத்தம் நாளை (01.03.2025) முடிவுக்கு வரும் நிலையில், இரண்டாவது கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஹமாஸ் அமைப்பினா் அறிவித்தனர்.

அதன்படி போர் நிறுத்தத்தின் அடுத்த கட்டத்தை செயல்படுத்துவது குறித்து இஸ்ரேஸ்- ஹமாஸ் இடையிலான பேச்சுவார்த்தை இன்று தொடங்கியதாக எகிப்து தெரிவித்துள்ளது. இஸ்ரேல், கத்தார் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கெய்ரோவில் போர்நிறுத்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்து தீவிரமான ஆலோசனைகளை தொடங்கியதாக எகிப்து அரசின் தகவல் தொடர்பு துறை தெரிவித்துள்ளது. மக்களின் துயர் துடைப்பதற்கும், அப்பகுதியில் ஸ்திரத்தன்மையை ஆதரிப்பதற்கும் காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதை அதிகரிப்பதற்கான வழிகளையும் மத்தியஸ்தர்கள் விவாதித்து வருவதாக எகிப்து அரசு கூறி உள்ளது.

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையானது போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை நோக்கமாகக் கொண்டது. இதில் காசாவில் உயிருடன் உள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக் கைதிகளையும் திருப்பி அனுப்புவது மற்றும் அனைத்து இஸ்ரேலிய படைகளையும் காசாவில் இருந்து திரும்பப் பெற்று நிரந்தர அமைதியை ஏற்படுத்துவது ஆகியவையும் இந்த பேச்சுவார்த்தையில் அடங்கும்

மீதமுள்ள இறந்த பணயக்கைதிகளை திரும்பப் பெறுவது தொடர்பாக 3-ம் கட்ட பேச்சுவார்த்தையின்போது முடிவு செய்யப்படும்.

காசாவில் இன்னும் 59 இஸ்ரேலிய பணயக் கைதிகள் இருப்பதாகவும் அவர்களில் 24 பேர் உயிருடன் இருக்கலாம் என்றும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.