இந்திய அறிவியலாளர்கள் என்று சொன்னாலே, நம் நினைவுக்கு முதலில் வருபவர் சர் சி.வி.ராமன்தான். அவர் கண்டறிந்த ‘ராமன் விளைவு’ கோட்பாடு அறிவியல் உலகின் பல்வேறு ஆய்வுகளுக்கும் கண்டறிதல்களுக்கும் இன்று வரை முன்னத்தி ஏராக உள்ளது. இந்த விளைவை ராமன் எப்படிக் கண்டறிந்தார், தெரியுமா? ஒருமுறை கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக ஐரோப்பாவில் நடைபெற்ற விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு ராமன் கப்பல் பயணம் மேற்கொண்டார்.
இயற்கை மீதிருந்த ஆர்வத்தால் வானத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார் ராமன். அவர் பார்த்த மத்திய தரைக் கடல் பகுதியில் வானம் ஏன் அவ்வளவு நீல நிறமாகக் காட்சியளிக்கிறது என்று சிந்திக்கத் தொடங்கினார். இந்தக் கேள்வி அவருடைய மனதில் ஊடுருவியது. இதற்காகப் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்.
அப்படி ராமன் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் ஒளி ஊடுருவக்கூடிய ஊடகம் திடப்பொருளா கவோ, திரவப்பொருளாகவோ அல்லது வாயுப்பொருளாகவோ இருக்கலாம். அந்த ஊடகங்களுக்குள் ஒளி செல்லும்போது அதன் இயல்பில் ஏற்படும் மாறுதல்களுக்குக் காரணமாக ‘ஒளியின் மூலக்கூறு சிதறல்’ (molecular scattering light) ஏற்படுகிறது என்கிற உண்மையை ராமன் கண்டறிந்தார். அவரின் இந்தச் சிறப்பான கண்டறிதலுக்கு நோபல் பரிசுக் கிடைத்தது.
அவர் தன்னுடைய ஆய்வின்போது வண்ணப்பட்டை நிழற்பதிவுக் கருவியைப் (spectrograph) பயன்படுத்தினார். சூரிய ஒளியைப் பல்வேறு ஊடகங்களின் வழியே செலுத்துவதன் மூலம், நிறமானியில் சில புதிய ‘வண்ண வரிகள்’ தோன்றுவதைக் கண்டார். அவை ‘ராமன் வரிகள்’ என்றும், அவருடைய கண்டறிதல் ‘ராமன் விளைவு’ (Raman effect) என்றும் பின்னாளில் அழைக்கப்பட்டன. அந்த ‘ராமன் விளைவு’ கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. அதனால்தான் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 28 அன்று ‘தேசிய அறிவியல் நாள்’ கொண்டாடப்படுகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தொடர்புக்கான தேசிய கவுன்சில் (என்சிஎஸ்டிசி) 1986இல் மத்திய அரசுக்குத் தேசிய அறிவியல் நாள் கொண்டாட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தது. அதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, 1987ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 28 அன்று தேசிய அறிவியல் நாளைக் கொண்டாட ஒப்புதல் வழங்கியது.
இந்த நாளில் அறிவியலைப் பரப்புவதற்காக நாட்டில் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு அறிவியல் பரப்புதலுக்கான தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. 2025ஆம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் நாளின் மையக் கருத்து, ‘வளர்ந்த இந்தியாவுக்கான அறிவியல் மற்றும் கண்டறிதல்களில் உலகளாவிய தலைமைத் துவத்திற்கு இந்திய இளைஞர் களை மேம்படுத்துதல்.’