நாட்டு ரசிகர்கள் முன் சிறப்பாக செயல்பட விரும்பினோம் ஆனால்… – பாக். கேப்டன் முகமது ரிஸ்வான்

கராச்சி,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இதில் குரூப் – ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை. குரூப் – பி பிரிவில் இங்கிலாந்து அரையிறுதிக்கு வாய்ப்பை இழந்து விட்டது.

அந்த பிரிவிலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் 2 அணிகளின் இடத்திற்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தொடரை நடத்தும் பாகிஸ்தான் ஒரு வெற்றி கூட பெறாமல் லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியதால் கடும் விமர்சங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாட்டு ரசிகர்கள் முன் சிறப்பாக செயல்பட விரும்பினோம். ஆனால், எங்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

சொந்த நாட்டு ரசிகர்கள் முன் சிறப்பாக செயல்பட விரும்பினோம். எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக இருந்தன. ஆனால், நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. சைம் அயூப், பகர் ஜமான் ஆகியோர் காயத்தால் விலகியது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட சைம் அயூப் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகினார். இது அணியின் சமநிலையை பாதித்தது. ஆனால், தோல்விக்கு அதை காரணமாக சொல்ல விரும்பவில்லை.

நாங்கள் வெவ்வேறு பகுதிகளில் முன்னேற்றங்களை பெற வேண்டும். கடந்த சில போட்டிகளில் நாங்கள் தவறுகளை செய்துள்ளோம். அதிலிருந்து கற்றுக்கொண்டு தவறுகளை சரி செய்ய வேண்டும். அடுத்ததாக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளோம். அங்கு சிறப்பாக செயல்படு முடியும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.