நிர்பயா நிதியில் தேசிய கல்விக் கொள்கை அம்சத்தை செயல்படுத்தும் சென்னை மாநகராட்சி? வலுக்கும் எதிர்ப்பு

தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் தேசிய கல்விக் கொள்கை விவகாரம் பெரும் விவாதப்பொருளாகவே இருக்கிறது. அதில், “மாநில ஆளுங்கட்சி தி.மு.க, மும்மொழிக் கொள்கையை இந்தித் திணிப்பு என்று திரித்து அரசியலைப் புகுத்தி தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாறுகிறது. இதை ஏற்கவில்லையென்றால் கல்விக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை” என்று மத்திய பா.ஜ.க அரசு அதிகாரத் தொனியில் கூறிவருகிறது. அதற்கு, “தேசிய கல்விக் கொள்கைக்கும் கல்வி நிதி ஒதுக்குவதற்கும் சம்மந்தமில்லை. மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடாமல், எங்கள் நிதியை ஒதுக்குங்கள்”‘ என இங்குள்ள தி.மு.க அரசு கூறிவருகிறது.

ஸ்டாலின் – மோடி

உண்மையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளைத் தாண்டி பல சமூக அமைப்புகளும், கல்விசார் இயக்கங்களும் இந்த தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்கு மும்மொழிக் கொள்கை மட்டுமல்லாது பல காரணங்கள் இருக்கிறது. அத்தகைய காரணங்களில் ஒன்றுதான், குலக்கல்வியை மறைமுகமகப் புகுத்துவது என்பது. தேசிய கல்விக் கொள்கை வரைவில், பகுதி 1 பள்ளிக் கல்வியில், 4.பள்ளிகளில் உள்ள பாடத்திட்டமிமும் கற்பித்தலும் தலைப்பின் கீழ் 4.26 பத்தியில் “6 முதல் 8-ம் வகுப்புகளுக்குத் தோதான ஒரு பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட பாடத் திட்டத்தை வடிவமைக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அனைத்தும் மாணவர்களும் உள்ளூர் தச்சு, தோட்ட வேலை, மண்பாண்டம் செய்யும் கைவினை கலைஞர்களிடம் 10 நாள்கள் புத்தகப்பையற்ற தொழிற்பயிற்சி பெறுவர்.

தேசிய கல்விக் கொள்கை – 2020

6 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இதே போன்ற தொழிற்பயிற்சிக் கல்வி கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். குறிப்பிட்ட இடைவெளிகளில், குழந்தைகள் அவர்களது பள்ளிகளுக்கு வெளியேயுள்ள வரலாற்று, பண்பாட்டு, சுற்றுலா முக்கியத்துவம் உள்ள இடங்களுக்கும், நினைவுச் சின்னங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கும், உள்ளூர் கலைஞர்களையும், கைவினைஞர்களையும் சந்திப்பதற்கும், உள்ளூரில்/தாலுகாவில்/மாவட்டத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களைப் பார்ப்பதற்கும் அழைத்துச் செல்லப்படும்.” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதைத்தான், குலக்கல்வியை புகுத்தும் செயல் என்று பல தரப்பிலிருந்தும் எதிர்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில், பெருநகர சென்னை மாநகராட்சி, 208 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வார தொழிற்கல்வி வகுப்புகள் தொடங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர் (கல்வி) J. விஜயராணி அறிவிப்பில், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை தையல் திறன் பயிற்சி மற்றும் 7, 8, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தையல், எம்பிராய்டரி கற்றுத்தர ஆசியர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் என்றும், அதற்காக நிர்பயா நிதியில் பாதுகாப்பான நகரம் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி வழங்குநரை நியமிக்க ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டிருக்கிறது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி

இந்த நிலையில், “பள்ளிக்கு படிக்க வந்த குழந்தைப் பருவ மாணவர்களை அரைகுறைத் திறன் கொண்ட கூலித் தொழிலாளர்களாக வேலைச் சந்தையில் (Job Market) சிக்க வைக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.” என பெருநகர சென்னை மாநகராட்சியின் இந்தத் திட்டத்துக்கு எதிராக பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த முழு அறிக்கையில், “குழந்தைப் பருவ மாணவர்களுக்கு வேலைத் திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தைச் சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும். பள்ளியில் மாணவர்கள் ஓவியம் உள்ளிட்ட நுண் கலைகள் கற்றுக் கொள்ளத் தேவையான ஆசிரியர்கள், இசை, பாடல், நாடகம் உள்ளிட்ட நிகழ் கலைகள் கற்றுக் கொள்ளத் தேவையான ஆசிரியர்கள், விளையாட்டுத் துறையில் உடற்பயிற்சியுடன் கூடிய தடகளம், கால் பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டுகள் பயிற்சி மேற்கொள்ள ஆசிரியர்கள், கணினிப் பாடம் கற்றுக் கொள்ள ஆசிரியர்கள் நிரந்தர பணியிடத்தில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்படுகிறது. சமமான கற்றல் வாய்ப்புகள் அனைவருக்கும் உருவாக்கித்தர வேண்டும் என்பதே சமச்சீர் கல்வியின் நோக்கம்.

பிரின்ஸ் கஜேந்திர பாபு

இவற்றைச் செய்ய முன்வருவதற்கு பதிலாக நிர்பயா நிதியில் பாதுகாப்பான நகரம் திட்டத்தின் கீழ் சித்திரத்தையல் உள்ளிட்ட தையல் வேலைத் திறன் பயிற்சிகளை வழங்க திறன் பயிற்சி வழங்குநரை நியமிக்க ஒப்பந்த புள்ளிகள் (tender) சென்னை மாநகராட்சி கோரி உள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. வேலைத் திறன் பயிற்சி எந்த வகையிலும் குழந்தைப் பருவ மாணவர்களுக்கு வழங்கக் கூடாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பிஎம் ஶ்ரீ பள்ளி திட்டம் உள்ளிட்ட தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ ஏற்க மறுப்பதற்கான பல காரணங்களில் ஒன்று குழந்தைப் பருவ மாணவர்களுக்கு வேலைத் திறன் பயிற்சி வழங்க வழி வகுத்துள்ளதாகும்.

மாதிரிப் பள்ளிகள் உள்ளிட்ட தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் பல்வேறு கூறுகளை பள்ளிக் கல்வித் துறை பல்வேறு பெயர்களில் தமிழ்நாட்டில் மிகவும் பக்குவமாக நடைமுறைப்படுத்தி வருவதின் ஒரு கூறாகவே சித்திரத்தையல் உள்ளிட்ட தையல் வேலைத் திறன் பயிற்சியினைப் பார்க்க வேண்டியுள்ளது. நிர்பயா நிதி பெண்கள் பாதுகாப்பிற்கான நிதி. பாலின சமத்துவம், பெண்கள் மீது நடத்தப்படும் பல்வேறு வன்கொடுமைகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான நிதி.‌ குழந்தைப் பருவ பெண் குழந்தைகளுக்கு சித்திரத்தையல் உள்ளிட்ட தையல் வேலைத் திறன் வழங்குவதன் மூலம் பாதுகாப்பான நகரம் எப்படி உருவாகும் என்பதை புரிந்துக் கொள்ள இயலவில்லை.

பள்ளி

பெண் குழந்தைகளுக்கு வேலைத் திறன் பயிற்சி அளித்தால் அவர்கள் ஏதாவது ஒரு வேலைச் செய்து தங்களைத் தாங்களே பொருளாதார ரீதியாக தற்காத்துக் கொள்வார்கள் என்பதாக பொருள் தரும் படி சென்னை மாநகராட்சியின் நடவடிக்கை அமைந்துள்ளது. பள்ளிக்கு படிக்க வந்த குழந்தைப் பருவ மாணவர்களை அரைகுறைத் திறன் கொண்ட கூலித் தொழிலாளர்களாக வேலைச் சந்தையில் (Job Market) சிக்க வைக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. சென்னை மாநகராட்சி பள்ளிகள் உள்ளிட்ட தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இத்தகைய வேலைத் திறன் பயிற்சி வழங்கும் திட்டங்களைத் தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

வேலைத் திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தை உடனடியாக கைவிட்டு, மாநகராட்சி பள்ளிகளில் குழந்தைகளுக்கு தொடக்க வகுப்பு முதல் பாடத்திற்கு ஒரு ஆசிரியர், வகுப்பிற்கு ஒரு ஆசிரியர், கணினி , உடற்பயிற்சி, நுண்கலை, நிகழ்கலை ஆசிரியர்கள், அலுவல், துப்புரவு மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்களை நிரந்தரப் பணியிடத்தில் நியமிக்க சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் முன்வர வேண்டும். மக்களிடம் சொத்துவரி உள்ளிட்ட ஏராளமான வரிகளை வசூலிப்பதுடன் நூலகம் மற்றும் கல்விக்கான சிறப்பு வரிகளும் (cess) உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கின்றன. வரி வருவாயை நியாயமான முறைகளில் செலவு செய்ய உள்ளாட்சி அமைப்புகள் முன்வர வேண்டும்.

அரசுப் பள்ளி – அன்பில் மகேஸ்

தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் மூலம் பள்ளி செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதிப்பது நியாயமான அணுகுமுறை அல்ல. ஒப்பந்ததாரர்கள் தங்களின் கருத்தை குழந்தைப் பருவ மாணவர்கள் மனதில் விதைக்க வாய்ப்புகள் உண்டு. மாநகராட்சி அல்லது அரசு ஊழியர்களாக ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் நியமிப்பது மட்டுமே குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். சென்னை மாநகராட்சி குழந்தைப் பருவ மாணவர்களுக்கு வேலைத் திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். சமூகநீதியின் அடிப்படையில் சமச்சீராக அனைவருக்கும் கல்விக் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதிப் படுத்த வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.